அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதற்கு, திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஈவு இரக்கமற்ற மூர்க்கத்தனமான தான்தோற்றித்தனமான காரியங்களை செய்கின்ற ஆளுநர் ஆர்.என்.ரவி ஆட்டம் போட்டு வருகின்றார். முதல்வருக்கு தான் யாரை அமைச்சராக்க வேண்டும் என்ற அதிகாரம் இருக்கிறது.


அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை பிரித்து கொடுத்து இருப்பதை ஏற்று கொள்ள முடியாது என ஆளுநர் சொல்லி இருப்பது அதிக பிரசிங்கதனமானது, அயோக்கியதனமானது. தமிழ்நாட்டில் இந்த ஆளுநர் இருக்கின்ற வரையில் ஜனநாயகத்தை எப்படி சீர்குலைக்க முடியுமோ, ஆட்சியை எப்படி சீர் குலைக்க வைக்க முடியுமோ என்று செயல்படுகிறார். பி.ஜே.பியின் ஏஜென்டாக, உளவாளியாக ஆளுநர் செயல்படுகின்றார். அவருக்கு இருக்கின்ற அதிகாரத்துக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.


முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது போல ஆளுநர் செயல்படுகிறார். மக்கள் தேர்வு செய்தது ஸ்டாலினைத் தான். ஆர்.என்.ரவியை இல்லை. ஆளுநர் ரவி மத்திய அரசின் ஒரு வேலைக்காரர், ஏஜென்ட். அவ்வளவுதானே தவிர முதல்வரல்ல. ஒன்றிய அரசு அனைத்து இடங்களிலும் பிஜேபியை கொண்டு வந்து கைப்பற்ற நினைக்கின்றனர். சர்வாதிகார்தை நிலைநாட்ட மோடி அரசு முயற்சிக்கிறது. அதில் தோற்றுப் போவார்கள்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண