கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு வைகோவின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது துரை வைகோ தான் அருகில் இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டார்.
இதையடுத்து துரை வைகோவிற்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என குரல்கள் எழுந்தன. அதன்பின்னர் அவருக்கு மதிமுக முதன்மை செய்லாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
இதனிடையே மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்தார்.
மதிமுக முதன்மை செயலாளராக பதவி வகித்த துரை வைகோவிற்கும் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் மல்லை சத்யாவுக்கு மோதல் போக்கு நிலவி வருவதாக மதிமுக ரணகளமாகி வருகிறது.
இந்த மோதல் போக்கால் தான் துரை வைகோ திருச்சி நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என மல்லை சத்யா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மல்லை சத்யா சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் அதனால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் துரை வைகோ வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு வைகோ அனுமதி வழங்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், துரை வைகோ தனது கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “தொலைக்காட்சி செய்தியை பார்த்துதான் எனக்கே தெரியும். துரை வைகோ கட்சி முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.