மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்காத நிலையில் வைகோ விளக்கம் அளித்துள்ளார். “மதிமுகவினர் யாரையும் நான் இழக்கவில்லை. என்னோடு எவ்வளவு காலம் பயணித்த சில நிர்வாகிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்திவர்களும் கட்சிக்கு துரோகம் நினைப்பவர்கள் இந்த பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்கவில்லை. திமுக மதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. திமுக கூட்டணியில் முழு புரிதலோடு பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 


முன்னதாக, மதிமுக தலைமை கழகச் செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டதற்கு அந்தக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. மதிமுகவின் 28 ஆவது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், துரை வையாபுரியின் பொறுப்பை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 


இன்று மதிமுகவின்  28 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அரசியல் நடவடிக்கை, கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. நீட் உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் தொடர்பாக அரசியல் தீர்மானம் நிறைவேற்ற இருக்கின்றனர். முன்னதாக, வைகோ மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் தலைமை கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு 3 மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மதிமுக தலைமை கழகச் செயலாளராக துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. 


கடந்த அக்டோபர் மாதம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. என் 56 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கிறேன். 28 ஆண்டு காலம்  லட்சக்கணக்கான கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டிருக்கிறேன்,


நூற்றுக்கணக்கான போராட்டங்கள், 5.5 ஆண்டுகாலம் ஜெயில் வாழ்க்கை என அரசியலில் என் வாழ்க்கையை அழித்திருக்கிறேன். அரசியல் என்னோடு போகட்டும். என் மகன் வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை.

 

எனவே அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர் அரசியலுக்கு வருவதை 20 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கட்சிக் குழு கூட்டம் முடிவு செய்யும் எனக் கூறியுள்ளார். மேலும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த விவசாயிகள் படுகொலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை ஈவு இரக்கமற்ற கோரப் படுகொலை. தாலிபான்கள் செயல்பாடுகளை போல் இங்கு செய்து உள்ளனர் இதற்கு மன்னிப்பே கிடையாது  நீதிமன்றத்தை கூட  அவர்கள் மதிக்கவில்லை" எனவும் கூறினார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண