மதிமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக குற்றம் சாட்டிய அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமிக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.
அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம்
சில தினங்களுக்கு முன் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிமிகு உரைகளை கேட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் உங்கள் பேச்சில் உறுதியும், உண்மையும் இருக்கும் என்று நம்பி ஆதரித்தனர். ஆனால் வைகோவின் குழப்பமான அரசியல் நிலைப்பாடு காரணமாக உங்களை ஆதரித்து திமுகவில் பிரிந்து வந்த பெருவாரியான முன்னணி தலைவர்கள், தோழர்கள் மதிமுகவை விட்டு படிப்படியாக வெளியேறி மீண்டும் திமுகவில் இணைந்து விட்டனர்.
மேலும் வைகோ தனது மகனை ஆதரித்தது, சந்தர்ப்பவாத அரசியல் செய்வது ஆகிய செயல்கள் மக்கள் மத்தியில் கழகத்தை எள்ளி நகையாட செய்துவிட்டது. உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது” என தெரிவித்திருந்தார். இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டதோடு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்து மோதல்
இதற்கு பதிலளித்த கட்சியின் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, கட்சிக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொது வெளியில் பேசியது சரியானது இல்லை. திருப்பூர் துரை சாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறினார். கூட்டணியில் இருந்தாலும் எங்களுக்கென தனி கொள்கை உள்ளது. கடந்த ஓராண்டாக கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில், முக்கிய நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதி வருகிறார். மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை . மூத்த நிர்வாகி என்பதால் அவர் மீது எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். இதற்கு கருத்து தெரிவித்த திருப்பூர் துரைசாமி, துரை வைகோ சின்ன பையன், அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என கடுமையாக விமர்சித்திருந்தார்.
மௌனம் கலைத்த வைகோ
இந்நிலையில் திருப்பூர் துரைசாமியின் குற்றச்சாட்டுக்கு வைகோ விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “துரை வைகோ தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாட்டில் 99 சதவீத மதிமுகவினர் ஒரே எண்ணத்தில் இருக்கிறார்கள். திருப்பூர் துரைசாமியின் குற்றச்சாட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை. எத்தனையோ தடைகளை தாண்டி வந்துள்ளோ,. இன்னும் பல தடைகளை எதிர்க்க தயாராக உள்ளோம். என் மகன் அரசியலுக்கு வர வேண்டாம் என நான் தான் கூறினேன். ஆனால் மதிமுகவினர் வற்புறுத்தியதால் தான் வந்தார், ஜனநாயக முறைப்படி கட்சியில் உள்ள அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. சிலவற்றை நாங்கள் அலட்சியப்படுத்துவதோடு, சிலவற்றை நாங்கள் நிராகரிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.