'மீளவே முடியாத மண முறிவு என்னும் சூழலில், இந்த நீதிமன்றத்தால் விவாகரத்து வழங்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். இது பொது மக்களின் அடிப்படைக் கொள்கைகளை மீறாது' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குடும்பநல நீதிமன்றத்துக்குச் செல்லாமல் விவாகரத்து பெறக் கோரும் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு இன்று தெரிவித்துள்ளது. 


பரஸ்பரம் பிரிய விரும்பும் தம்பதிகளை சட்டப்பிரிவு 142-ன் கீழ் குடும்ப நல நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்காமலேயே விவாகரத்து வழங்குவது குறித்த சாதக - பாதகங்களை இது ஆராய்ந்தது. 


முன்னதாக நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கன்னா, ஏ.எஸ்.ஒக்கா, விக்ரம் நாத் மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி அன்று தீர்ப்பை ஒத்தி வைத்தது. 






அப்போது, ’சமூகத்தில் மாற்றங்கள் நடக்க நேரம் எடுக்கும்.ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது சில நேரங்களில் எளிதாக இருக்கலாம். ஆனால் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள சமூகத்தை வலியுறுத்துவது கடினமாக இருக்கும்’ என்று கூறியிருந்தது. இந்தியாவில், திருமணங்களில் குடும்பங்கள் வகிக்கும் முக்கியப் பங்கு குறித்தும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது. 






இந்த நிலையில் இன்று (மே 1) 'மீளவே முடியாத மண முறிவு என்னும் சூழலில், இந்த நீதிமன்றத்தால் விவாகரத்து வழங்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். இது பொது மக்களின் அடிப்படைக் கொள்கைகளை மீறாது' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது சட்டப் பிரிவின் கீழ் விவாகரத்து வழங்குவதற்கு அதன் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். எனினும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய ஆறு மாதங்கள் கட்டாய காத்திருப்பு காலத்தை, தேவைக்கு உட்பட்டு ரத்து செய்யலாம்'' என்றும் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.