மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த குன்னம் ஊராட்சியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் அமைந்துள்ளது பெரம்பூர் கிராமம் உள்ளது.  எப்பொழுதும் பசுமை நிறைந்து எழில் கொஞ்சும்  பகுதிகளாக இந்த கிராமம் இருந்து வருகின்றது. அதுமட்டுமின்றி இன்றி இப்பகுதியில் விவசாயிகள் மூன்று போகம் நெல், சாகுபடி செய்து வருகின்றனர்.





இந்தகைய சிறப்பு மிக்க இக்கிராமம் எப்போதும் அமைதியாக காட்சி அளிப்பதால்  பறவைகள் இடையூர் இன்றி விரும்பி தங்கும் இடமாக இது அமைந்துள்ளது. இப்பகுதியில் இளுப்பை மரம், வேப்பமரம், ஆலமரம், அரசமரம், மா, தென்னை உள்ளிட்ட மரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதம் இங்கு குளிர்ச்சியான சூழல் ஏற்படும்போது,  ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பறவைகள், வக்கா, நீர்காகம், செந்நாரை, உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் இக்கிராமத்தின் இயற்கை சூழலால்  பெரம்பூர் கிராமத்தை தேர்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம்  முதல் இப்பகுதியில் உள்ள மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றது.




தனது உணவு தேவைக்காக இங்கு இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு சுற்றளவிற்கு  சென்று தங்களுக்கு தேவையான இரைகளை சேகரித்து  மீண்டும் பெரம்பூர் கிராமத்தில் உள்ள தங்களது கூடுகளுக்கு திரும்பி வந்துவிடுகிறது.  இந்த கிராமத்திற்கு பறவைகள் குளிர்காலங்களில் வருவதால் இக்கிராமம் பறவைகள் சரணாலயம் போன்று காட்சியளிக்கிறது. 





இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்க கிராமத்தில்  சுமார் 200க்கும் மேற்பட்ட வெளி நாட்டு பறவைகள் கிராமத்தில் தங்கி இங்கேயே மரத்தில் கூடுகட்டி தனது குஞ்சுகளுடன் சொந்த ஊர் திரும்பி செல்கின்றது. வெளிநாட்டு பறவைகளுக்கு இந்த கிராமம் வாழ்வதற்கான சூழல் அமைந்துள்ளதால் இங்கேயே தங்கி வெளிநாட்டில் இருந்து தனியாக வந்து இங்கே இருந்து தனது குஞ்சுகளுடன் சொந்த ஊர் செல்லும் இந்தப் பறவைகளின் செயல்பாடு ஆச்சரியமாக உள்ளது. இது போன்று இங்கு உள்ள ஒரு ஆலமரத்தில் லட்சக்கணக்கான வவ்வால்களும் வாழ்ந்து வருகிறது.




எனவே எங்கள் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்தப் பறவைக்கு பாதுக்காப்பு அளிக்கும் வகையில் அவைகள் எந்த விதத்திலும் இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது  என்று கவனமாக செயல்படுகிறோம். நாங்கள் இவற்றை நேசிப்பதால், குரங்குகள் கூட மரத்தில் ஏறாமாலும்,  வெளிநபர்கள் வேட்டையடாதவாரும் பாதுகாத்துவருகிறோம் என்றும், முக்கியமாக, தீபாவளியன்று இங்கு யாரும் பட்டாசு வெடிப்பதில்லை.




தலைதீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைகளிடம் இது குறித்து முன்கூட்டியே சொல்லிவிடுகிறோம். அவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர் எனவும், குழந்தைகள்கூட பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டால் பல கிலோமீட்டர் தள்ளி அழைத்துச் சென்று அவர்களின் ஆசையை நிறைவேற்றுகிறோம். துக்க நிகழ்வு நடந்தாலும் வெடிச்சத்தத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால்  பட்டாசு வெடிக்கப்படுவது இல்லை என்றார்கள். இரக்கமுள்ள கிராமத்து மனிதர்கள் வாழும் பகுதிகளைத் தேர்வு செய்து, அந்த கிராமங்களில் குடியேறுகின்றன போல இந்த புத்திசாலி பறவைகள்.