மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

கடந்த ஆண்டில் ரூ.16.90 லட்சம் 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 42 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 267 பொதுப்பிரிவு பயனாளிகள் என மொத்தம் 309 நபர்களுக்கு ரூ. 16,90,550/- (பதினாறு லட்சத்து தொன்னூறாயிரத்து ஐநூற்று ஐம்பது மட்டும்) உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

இந்த உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்

* பதிவு மூப்பு: 31.12.2025 அன்றைய தேதியில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை முறையாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முழுமையடைந்திருக்க வேண்டும்.

* கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மேல்நிலை வகுப்பு (12-ஆம் வகுப்பு) மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* வயது வரம்பு: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

* வருமான வரம்பு: குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

*கல்வி பயில்பவர்கள்: விண்ணப்பதாரர் தற்போது எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் மாணவராகப் பயில்பவராக இருக்கக்கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தளர்வுகள்

மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு இந்தத் திட்டத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன:

*வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தாலே போதுமானது.

*இவர்களுக்கு வருமான வரம்பு மற்றும் வயது உச்ச வரம்பு ஏதுமில்லை.

உதவித்தொகை விபரங்கள் (மாதம் ஒன்றிற்கு)

* 10-ஆம் வகுப்பு தோல்வி - ரூ 200 

* 10-ஆம் வகுப்பு தேர்ச்சி - ரூ 300 

* மேல்நிலை வகுப்பு (12-ஆம் வகுப்பு) - ரூ 400

 * பட்டப்படிப்பு - ரூ 600 

மாற்றுத்திறனாளிகளுக்கு

* 10-ஆம் வகுப்பு தோல்வி & தேர்ச்சி - ரூ 600 

* மேல்நிலை வகுப்பு (12-ஆம் வகுப்பு) - ரூ 750

 * பட்டப்படிப்பு - ரூ 1000 

குறிப்பு: பொதுப்பிரிவினருக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்களது வங்கி கணக்கில் தொகை செலுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தொகை செலுத்தப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

* ஏற்கனவே மூன்று ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

* பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் சார்ந்த பட்டப்படிப்புகள் (Professional Degrees) முடித்தவர்கள் தகுதியற்றவர்கள்.

* அரசுப் பணியில் உள்ளவர்கள் அல்லது தனியார் துறையில் ஒரு முறையாவது பணியாற்றி ஊதியம் பெற்றவர்கள்/பெறுபவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் மற்றும் அரசின் இதர உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன்பெறுபவர்களும் இத்திட்டத்தில் சேர முடியாது.

தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய பதிவுதாரர்கள் கீழ்காணும் அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல்களுடன் நேரில் வரவேண்டும்:

* வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை.

* பள்ளி/கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச்சான்றிதழ் (TC).

* குடும்ப அட்டை (Ration Card) மற்றும் ஆதார் அட்டை.

* சாதிச்சான்றிதழ்.

* தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தகம்.

விண்ணப்பம் கிடைக்கும் இடம்

மயிலாடுதுறை, பூம்புகார் சாலை, பாலாஜி நகர், 2-வது தெருவில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.htmlஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்பவர்கள் 04364-299790 என்ற எண்ணிற்கு அழைத்து உரிய அறிவுரைகளைப் பெறுவது அவசியமாகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.02.2026.

காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.