புதிய ஐடி சட்டத்தின் இரண்டு உட்பிரிவுகள் அச்சு, எலெக்ட்ரானிக் ஊடக சுதந்திரத்தைப் பறித்துக் கொள்ளும் வகையில் இருப்பதாக பாடகர் டி.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஐடி விதிகள் தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில்  பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்தார். அந்த மனுவின் விசாரணையின் போது ஏற்கெனவே மும்பை உயர் நீதிமன்றம் கூறிய கருத்தைப் போலவே சென்னை நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.


முதலில் மத்திய அரசின் புதிய ஐடி விதிகள் சொல்வது என்ன என்று அறிவோம்: சமூக வலைதளங்களில் தனிநபர்களால் பகிரப்படும் கருத்துகளால், இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான கருத்துகள் கட்டமைக்கப்படுகிறது என்பது மத்திய அரசின் நீண்ட கால குற்றச்சாட்டு., இதனாலேயே ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐக் கொண்டுவந்தது.


அதில், சமூக ஊடக நிறுவனங்கள் அதன் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிடவேண்டும். புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பதற்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். 
சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணிநேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.  சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிரவேண்டும் என அனைத்து சமூக வலைதள ஊடகங்களுக்கும் மத்திய அரசு கெடுவிதித்துள்ளது. 


இந்நிலையில், புதிய ஐடி விதிகள் தனது தனிப்பட்ட சுதந்திரத்தை முடக்கும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தி மனு தாக்கல் செய்தார் பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா. 




டி.எம்.கிருஷ்ணா தனது மனுவில், "உச்ச நீதிமன்றம் 20117ல் வழங்கிய தீர்ப்பில் தனிநபர் உரிமை என்பது அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-இன் கீழ் வழங்கப்படும் வாழ்வுரிமையின் கீழ் வருகிறது எனத் தெளிவுபடத் தெரிவித்திருக்கிறது. தனியுரிமை என்பது வாழ்க்கை, புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, மகிழ்ச்சி, உருவாக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அவை ஒரு கலைஞன் சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும், வாழ வழி செய்கிறது. அப்போதுதான் ஒரு தனிநபர்  ஒரு கலைஞனாக மட்டுமல்ல மனிதனாகவும் உணரமுடியும். ஆனால், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் ஒரு கலைஞன் மற்றும் கலாச்சார வர்ணனையாளரான எனது உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது.  சமூக ஊடக சேவைகளின் பயனாளராகவும், ஆன்லைன் உள்ளடக்கத்தை உருவாக்கியவர் என்ற முறையிலும் எனது உரிமைகளை பறிப்பதாகவும் உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி பிடி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


நீதிபதிகள் கூறியதாவது:


முதலில் இந்த மனுவில் குறிப்பிட்டதுபோல் புதிய ஐடி சட்டங்களால் அரசு ஊடகங்களைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயகக் கொள்கைகளையும் கையகப்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறி அடுத்த விசாரணையை அக்டோபர் இறுதிக்கு ஒத்திவைத்துள்ளது. குறிப்பிட்ட 2 சட்ட உட்பிரிவுகளுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இதே போன்றதொரு கருத்தை கடந்த மாதம் பாம்பே உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. புதிய ஐடி சட்டத்தின் பிரிவு 9ன் உட்பிரிவு 1 மற்றும் 3 பேச்சு மற்றும் எழுத்துச் சுதந்திரத்தை நசுக்குவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.