இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யா (102) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி:
அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சீரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். இன்னும் இரண்டு மூன்று நாள்கள் மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை எடுத்துக்கொள்வார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருடைய உடல்நலம் தேறி அவர் மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில் தோழர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று கட்சியின் மாநிலக்குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று தோழர் என்.சங்கரய்யாவை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக பேசினர். தோழர் சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம்:
102 வயதான சங்கரய்யா தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றவர். 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் உள்ள சங்கரய்யா, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் தொடங்கிய போது அதில் பங்கு வகித்த 36 பேரில் ஒருவர். சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள், தேசியத் தலைவர்கள் என பலருடனும் நேரடி தொடர்பு கொண்டவர். சங்கரய்யா, வயோதிகம் காரணமாக கட்சி பணிகளிலிருந்து சில ஆண்டுகளாக விலகி உள்ளார்.
சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காத நிலையில் பல்வேறு தரப்பினரும் ஆளுநருக்கு எதிரான தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மதுரையில் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க