மதுரை யுடியூபர் மாரிதாஸ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்," NO CAA என வாசலில் கோலம் போட்ட விவகாரம் தொடர்பாக , காயத்திரி திமுக -பாகிஸ்தான் சேர்ந்து போட்ட கோலம் என்ற தலைப்பில் யூடூயூபர் மாரிதாஸ் வீடியோ வெளியிட்டு திமுகவை களங்கப்படுத்தி, திமுக மீது அவதூறு பரப்பி உள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி திமுக மாணவர் பிரிவை சேர்ந்த உமரி சங்கர் என்பவர் தூத்துக்குடி JM3 நீதிமன்றத்தில் மாரிதாஸ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். என் மீது உமரி சங்கர் வழக்கு தொடர முகாந்திரம் இல்லை. எனவே என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மாரிதாஸ் தரப்பில், "மாரிதாஸ் ஒரு அரசியல் விமர்சகர் கருத்து சுதந்திரத்தின் கீழ் பேசி உள்ளார். உமரிசங்கர் குறித்து ஏதும் பேசவில்லை. உமரி சங்கருக்கு இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எந்த முகாந்திமும் இல்லை. எனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உமரி சங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
வாக்குக்கு பணம் தருவதாக கூறி போராடிய CPI(M) யின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட 26 பேர் மீதான வழக்கை ரத்து
CPI(M)யின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட 26 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "கடந்த 2016ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மேற்கு தொகுதியில் சிபிஐ கட்சி சார்பில் உ.வாசுகி போட்டியிட்ட நிலையில், அதிமுக சார்பில் செல்லூர் கே.ராஜூ போட்டியிட்டார். அதிமுக சார்பில் மக்களுக்கு வாக்குக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக வழக்கு பதிவு எதுவும் செய்யப்படவில்லை. அதை தடுக்கவும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதோடு காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம். வாக்கிற்கான மதிப்பை காக்கும் விதமாகவே இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை தற்போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனை காரணம் காட்டி காவல்துறையினர் தொடர்ச்சியாக துன்புறுத்துகின்றனர். ஆகவே தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை கண்டித்தே மனுதாரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதில் பொதுச்சொத்துக்கள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. மனுதாரரில் ஒருவரும் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், வாக்குக்கு பணம் கொடுப்பது தவறானது என்பதன் காரணமாகவே, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை வாக்குக்கு பணம் கொடுத்தவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆகவே அவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்