விழுப்புரம் : மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலியான சம்பவம்:- மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மரியா சோபி உள்ளிட்ட 2 காவல்துறை ஆய்வாளர்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவு.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் கிராமத்தை சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர் இவர்களில் 16 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் சங்கர், சுரேஷ், தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மரக்காணம் காவல்துறையினர் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளியான அமரன் என்பவரை கைது செய்துள்ளனர்.  மேலும் மூவரை தேடி வருகின்றனர்.


இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் எக்கியார் குப்பம் பொது மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுக்க காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இருப்பினும் பொது மக்கள் கலைந்து செல்லாத நிலையில் மாவட்ட ஆட்சியர் பழனி, மற்றும் மாவட்ட காவல் கண்கானிப்பாளார் ஸ்ரீநாதா இருவரும் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


இது குறித்து பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் பழனி:


சாராயம் விற்பனையில் ஈடுபட்ட ஐந்துபேரை காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கூடிய விரைவில் மேலும் நான்கு பேரும் கைது செய்யப்படுவார்கள். அனைவர் மீதும் குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் நிவாரன நிதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உரிய நிவாரனம் வழங்கப்படும் என தெரிவித்தார்.


விழுப்புரம் மாவட்டம் காவல் கண்கானிப்பாளார் ஸ்ரீநாதா பேசுகையில்:


நேற்று தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர், வருவாய்த்துறையினருடன் இனைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எக்கியார் குப்பம் கிராமத்திற்கு சென்று சாராயம் குடித்துள்ளவர்களை கண்டறிந்து அவர்களையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்துள்ளோம் மேலும் நான்குபேரை பிடிக்க நாவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சார விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்களுடன் காவல்துறையினர் உடந்தையாக இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார், மேலும் இறந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதித்துள்ளனர் என தெரிவித்தார்.