அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார். 


 இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும்  மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் முழுக்க தங்கள் அம்மாவை நினைத்து உருக்கமான பதிவுகளை பலரும் வெளியிட்டு வருகின்றனர். மேலும் சகோதரி, மகள், மனைவியையும் தங்கள் தாயாக பாவித்தும் அன்பான வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


அம்மாக்களின் பிறப்பைக் கொண்டாடவும், அவர்களின் தியாகத்தைப் போற்றவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. நம் கலாச்சாரம் கூட மாதா, பிதா, குரு, தெய்வம் என சொல்லிக் கொடுத்துள்ளது. அந்த அளவுக்கு “தாயினும் சிறந்த கோவிலும் இல்லை.. தாயைப் போல ஒரு சக்தியும் இல்லை” என அம்மாக்களின் மகத்துவம் போற்றப்படுகிறது. 


ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக் கூடாது. உலகில் தாய்மையை முன்னிலைப்படுத்தும் நாடு நம் பாரத நாடு. பூமிக்கும் நம் தேசத்துக்கும் அன்னையையே முன்னிலைப்படுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.


இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தினத்தை முன்னிட்டு  தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் #MothersDay வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!


இதேபோல், கனிமொழி எம்.பி., வெளியிட்ட பதிவில், “அம்மாக்களின் அளவிட முடியாத அன்பாலும், அசைத்திட முடியாத மனவலிமையாலும் இயங்கிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம்!” என தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "தாயின் அன்பையும் தாய்மையின் பெருமையையும் போற்றும் அன்னையர் தினமான இன்று, குடும்பத்தில் அனைவரையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்கும் தாயின் கடின உழைப்பு, தியாகங்கள், நம் வாழ்வில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கினை போற்றுவோம்" என வாழ்த்துகளை கூறியுள்ளார். 


இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட பதிவில், “தாய் மட்டும் தான் தோற்ற பிள்ளையின் பின்னால் நிற்பாள். எல்லா உறவும் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு காரணத்தில் முரண்படும், விலகும் நேரத்தில் சாப்பிடுகிறதா தன் பிள்ளை என்பதுதான் ஒரு தாயின் வாழ்வு நோக்கம். தாய் ஒரு மனிதனுக்கு பாதிபலம். அன்னையர் தின வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.