சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை தொழில் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி வி கணேசன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொழிற் பயிற்சி நிலையம் முழுவதும் சென்று சுற்றி பார்த்து வேறு என்ன வசதிகள் தேவை என ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இதன் பின்னர் மாணவர்கள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ஆய்வகத்திற்குள் சென்ற அவர் மாணவர்களிடம், சரியாக பயிற்சித் தரப்படுகிறதா, வேறு என்ன பயிற்சி தர வேண்டும் என தனித்தனியாக கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ”தமிழகம் முழுவதும் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று, படிக்கும் இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பை பெற்று தர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொழிற் பயிற்சி நிலையத்திலும் சுமார் 36 ஆயிரம் இளைஞர்கள் படித்து வருகிறார்கள். இது தவிர 25 ஆயிரம் இளைஞர்கள் முதல் ஆண்டில் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு 63 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறினார். தமிழக முழுவதும் உள்ள 66 தொழிற் பயிற்சி நிலையங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 99 ஆயிரம் இளைஞர்களுக்கு பெற்று தருவதாக கூறினார். ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் நிலை உருவாக்கிக் கொண்டுள்ளோம் என்றார். இந்தியாவில் உள்ள தமிழகம் தான் அமைதியான மாநிலம் என்று நிறைய முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையை மாற்றும் முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தனியார் நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். தமிழக முதலமைச்சர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க 71 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூபாய் 31 கோடியே 98 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி உள்ளார். இதற்கான இடத்தை தேர்வு செய்து வருவதாக கூறினார். இது தவிர குறைகள் என்னவென்றும் கேட்டு ஆய்வு செய்து வருகிறோம்” என தெரிவித்தார். அப்போது சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி உட்பட பல அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு 10,496 தொழிலாளர்களுக்கு ரூ. 203 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியின் போது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உடன் இருந்தனர்.