இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் மனோபாலா. இவருக்கு தற்போது 69 வயதாகிறது. மனோபாலா 20 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.


இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்  குறைவு காரணமாக மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கல்லீரல் பாதிப்புக்காக கடந்த 15 நாட்களாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென  காலமானார். இன்று அவரது உடல் வளசரவாக்கம் மின்மயானத்தில் 10 மணியளவில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 


மனோபாலாவின் திரை பயணம்


இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப்  பணியாற்றியவர் மனோபாலா. பின் 1982-ஆம் ஆண்டு கார்த்திக்-சுகாசினி நடிப்பில் வெளிவந்த ஆகாய கங்கை  என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக அவதாரம் எடுத்தார்.  ஆனால் இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. பின் 1985ஆம் ஆண்டு நடிகர் மோகன்- ராதிகா நடிப்பில் வெளியான பிள்ளை நிலா திரைப்படம் இவருக்கு  திருப்புமுனையாக அமைந்தது. மேலும் நடிகர் விஜயகாந்தை வைத்து சிறப்பறவை, ரஜினிகாந்தை வைத்து ஊர்காவலன் உள்ளிட்ட 20 படங்களை  இயக்கியுள்ளார்.


1994 ஆம் ஆண்டு தாய்மாமன் என்ற படத்தில் அறிமுகமான இவர், சுமார்  170 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். நட்புக்காக, தாஜ்மகால், மின்சாரக்கன்னா, பேரழகன், சந்திரமுகி, குசேலன், அபியும் நானும், வேட்டைக்காரன், கண்டேன் காதலை, நண்பன், காற்றின் மொழி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் மனோபாலா.


தயாரிப்பாளராக தடம் பதித்த மனோபாலா
'சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை, சதுரங்கவேட்டை-2 படங்களை இவர் தயாரித்தார்.  சதுரங்கவேட்டை திரப்படம் ஒரு தயாரிப்பாளராக இவருக்கு புகழை தேடி தந்தது. 


காமெடியனாக கலக்கிய மனோபாலா
பாலா இயக்கத்தில் விக்ரம் மற்றும் சூர்யா நடித்த படம் பிதாமகன். இப்படத்தில் சூர்யாவுடன் கருணாஸ் மற்றும் மனோபாலாவும் இருப்பார்கள் வரும் சீன்கள் நல்ல நகைச்சுவை உணர்வை கொடுக்கும். இந்த படத்தில் லைலாவை ஏமாற்றும் காட்சிகளில் மனோபாலாவின் வசனம் மற்றும் அவருடைய உடல் அசைவுகள் ரசிகர்களுக்கு சிரிப்பு விருந்தாக அமைந்தது.


சுந்தர் சி இயக்கத்தில் விமல் மற்றும் மிர்ச்சி சிவா நடித்த படம் கலகலப்பு. இதில் சந்தானம் மெயின் காமெடியனாக நடித்திருப்பார். ஒரு காட்சியில் அஞ்சலியை கடத்திக் கொண்டு போகும் விமலை சந்தானம் துரத்திக் கொண்டு ஓடுவார். அப்போது அந்த ஊரில் சந்தானத்திற்கு எதிரியாக இருக்கும் மனோபாலா சந்தானத்தின் காரை துரத்திக் கொண்டு போவார். இதில் மனோபாலாவின் ரியாக்சன்கள் மற்றும் மனோபாலாவை பற்றிய சந்தானத்தின் வசனங்கள் மற்றும் கமெண்டுகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.


தனுஷ், ஹன்சிகா மோத்வானி, மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான படம் மாப்பிள்ளை. இந்த படத்தில் மனோபாலா போலி சாமியாராக காமெடியில் கலக்கியது ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைத்தது.