1963 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் சாவித்திரி நடித்த பஞ்ச அருணாச்சலம் தயாரிப்பில் கண்ணதாசன் கதை வசனத்தில் உருவான இரத்த திலகம் படத்தில் இடம் பெற்றுள்ள பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். கல்லூரி தோழர்களான சிவாஜியும், சாவித்திரியும் கல்லூரி காலம் முடியும் நேரத்தில் இந்த பாடலை பாடிப் பிரிந்து செல்வர்.
இந்த நிலையில் ஐந்து தலைமுறைகளாக 95 ஆண்டுகள் மாஞ்சோலை மலை கிராமத்தில் வசித்து வரும் 561 குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர். பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனத்தின் விருப்ப ஓய்விற்கு அனைவரும் கையெழுத்திட்ட நிலையில் அவர்களுக்கு கிராஜுவெட்டி தொகையின் 25% காசோலையாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அடுத்த 45 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்து செல்லும்போது மீதமுள்ள 75 சதவீதம் வழங்கப்படும் என தேயிலை தோட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே நிறுவனம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதை நேற்றோடு நிறுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் மாஞ்சோலையில் ஒன்று கூடி தங்களது பல ஆண்டு கால பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்ததோடு பசுமை நிறைந்த நினைவுகளே பாடலை தழுதழுத்த குரலில் பாடி பிரியா விடை கொடுப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர். மூன்றாண்டுகள் கல்லூரியில் ஒன்றாக படித்து விட்டு பிரிந்து செல்லும் நண்பர்களுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தும் என்ற நிலையில் பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து விட்டு அங்கிருந்து மறுகுடி அமர்விற்கு வேறு பகுதிக்கு செல்லும் மக்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே கண்ணில் நீர் கோர்க்கிறது.
அனைவரும் ஒரே இடத்தில் கூடி ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பறிமாறிக்கொண்டதுடன் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி கண்ணீர் விட்டு அழுது புலம்பிய காட்சிகள் அனைவரது மனதையும் கலங்கச் செய்தது. மக்களை பிரியும் அம்மண்ணும், தேயிலை தோட்டங்களும் கூட அவர்களின் பிரிவை நினைத்து கண்ணீர் வடிக்கும். அந்த அளவிற்கு அப்பகுதி வாழ்வியலோடு ஒன்றி பிணைந்த மக்கள் தான் பிறந்த மண்ணை விட்டு பிரிய மனமில்லாமால் பிரிந்து செல்லும் இறுதி காட்சிகள் வார்த்தைகளே இல்லாத வலியை மட்டுமே தாங்கி செல்வதை எடுத்துரைக்கிறது. அரசே எடுத்து நடத்தி மாஞ்சோலை மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வந்தனர். கண்ணீரும், கவலையுமாக இருக்கும் மாஞ்சோலை மக்களின் துயர் துடைக்க இறுதி நேரத்திலாவது அரசின் அறிவிப்பு வருமா? முதல்வரின் குரல் எங்களுக்காக ஒலிக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக கூறுகின்றனர் அங்குள்ள தோட்ட தொழிலாளர்கள்...!