யோகாசனத்தை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 


8ஆவது சர்வதேச யோகா தினம்


நாடு முழுவதும் இன்று (ஜூன் 21) முழுவதும் 8ஆவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ’மனித நேயம்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் 75 இடங்களில் சர்வதேச யோகா கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.


அந்த வகையில் மைசூருவில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு யோகா செய்தார். மைசூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்பட மொத்தம் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 


 






மைசூருவில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ”யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. தனி நபர்களுக்கு மட்டுமின்றி, பல நாடுகளுக்கும், உலகம் முழுமைக்கும் யோகா அமைதியைக் கொடுக்கிறது. உலகளாவிய நிகழ்வாக யோகா மாறி உள்ளது” என்று தெரிவித்தார்.


புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


முன்னதாக இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் 16 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து யோகாசனம் செய்தனர்.


இந்தியா தவிர, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நகரங்களிலும் மிக பிரம்மாண்டமான முறையில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


அன்புமணி வலியுறுத்தல்


இந்த நிலையில், யோகாசனத்தை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''உலக யோகாசன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. யோகாசனம் உலகிற்கு இந்தியா தந்த கொடை. தீரா நோய்களைக் கட்டுப்படுத்த யோகா அருமருந்து. இதன் பயனை அனைவரும் அனுபவிக்க வேண்டும். அதற்காக யோகாசனத்தை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண