கூட்டுச்சிறைக்குள் மனம் சிக்குண்டு இருப்பதாக யார் நினைத்தாலும் அவர்களை உடைத்து வெளியேற வைக்கும் இந்த ஒற்றை வரி. வரிக்குள் மருந்து வைத்து அனுப்பும் பாரதி இந்த வரிகளை சொகுசாக இருந்து எழுதிவிடவில்லை. ஒரு பசியின் துயரத்தை குடும்பம் உணர்ந்துகொண்டிருக்கும்போதே பாரதியிடம் இருந்து துள்ளி வந்த வரிகள் இவை. இந்த வரிகளுக்கு பின்னால் நடந்த சம்பவமும் சுவாரஸ்யமானது.


புதுச்சேரி பாரதி வாழ்வின் முக்கிய இடம். பாரதியார் 10 வருடங்கள் அங்கு இருந்தார். அங்கு அவர் இந்தியா என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியர். அப்போது அந்த பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மண்டயம் சீனிவாச ஆச்சாரியார். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்களின் குடும்பத்தினரும் நெருக்கமானவர்கள். சீனிவாச ஆச்சாரியாருக்கு யதுகிரி என்ற மகளும் உண்டு. 10 வயது சிறுமியான யதுகிரி பாரதியாருக்கு செல்லப்பிள்ளை. அடிக்கடி தன்னுடைய கவிதைகளையெல்லாம் யதுகிரிக்கு படித்துக் காட்டுவார் பாரதி. 10 வயதான யதுகிரி பாரதியாரின் பாடல்களை குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார். 




ஒருநாள் வழக்கம் போல் யதுகிரி, பாரதி வீட்டுக்கு வருகிறார். அப்போது பாரதி வீட்டில் இல்லை. அவரது மனைவி செல்லம்மாள் சோகமாக இருக்கிறார். அவரின் சோகத்தை முகத்தில் பார்த்த யதுகிரி, சிறுமியின் குரல் மாறாமல் 'என்ன ஆச்சு?' என கேட்டுள்ளார். மழலையின் அன்பு வார்த்தையில் நெகிழ்ந்துபோன செல்லம்மாள், அவரிடம் நடந்த கதையை சொல்கிறார். ''நான் பாரதியிடம் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு கட்டுரை அனுப்ப சொன்னேன். அவர் அனுப்பவே இல்லை. கட்டுரை அனுப்பினால் பணம் வரும்.குடும்ப நிலவரம் அவருக்கு புரியவில்லை. பால் காசு கொடுக்கவில்லை. உணவுப்பொருட்களும் இல்லை என்கிறார். 
 
பின்னர் சமையலுக்கு இருந்த கொஞ்ச அரிசியை எடுத்து வைத்துவிட்டு, குளிக்கச்சென்றுவிடுகிறார் செல்லம்மாள். திரும்பி வந்து பார்த்தால், முறத்தில் இருந்த அரிசியில் கால்பங்கை காணவில்லை. அருகில் இருந்த பாரதி அரிசியை அள்ளி முற்றத்தில் குருவிகளுக்கு அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார். அரிசியைக் கண்ட குருவிகள் கூட்டமாக வந்து கொத்தித் திங்கின்றன. அதனை அருகில் அமர்ந்து ரசித்துக்கொண்டு இருக்கிறார் பாரதி. மிகவும் கோவமாக வந்த செல்லம்மா கடுகடுவென நிற்கிறார். அவரைப்பாரத்து பாரதி பேசுகிறார், ''செல்லம்மா.. நாம் கோவப்படுகிறோம். முகத்தை திருப்பிக்கொள்கிறோம். ஆனால் இந்த சிட்டுக்குருவிகளை பார். எவ்வளவு இணக்கமாக உள்ளன. அன்பாக இருக்கின்றன. கண்கள் இருந்தும் நாம் இந்த சிட்டுக்குருவிகளை ரசிக்கவில்லை என்றால் நாம் மூடர்கள். இந்த பறவைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.




வீட்டில் இருந்த கொஞ்ச அரிசியும் வீணாய்போய்விட்டதே என்று கோபத்தில் கொப்பளித்த செல்லம்மாள், ''உங்களுக்கு பொறுப்பு இல்லை. உண்மை நிலவரம் புரியவில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாதபோது சிட்டுக்குருவி பாடம் முக்கியமா? கட்டுரை அனுப்பினால் பணம் கிடைக்கும். அதை எப்போது செய்வீர்கள்? நமக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கு. ஆண்டவன் என்னை சோதிக்கிறான்'' என புலம்பித் தள்ளுகிறார். செல்லம்மாளின் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொண்டே தன்னுடைய இளையமகள் சகுந்தலாபாரதியை அழைத்த பாரதி. அந்த கணத்திலேயே ஒரு பாடலை பாடுகிறார். அதுதான் 'விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே' பாடல். பாடலைக் கேட்டு சிறுமி சகுந்தலாபாரதி குஷியாகி ஆடுகிறார். பாரதி பாட, சகுந்தலா ஆட அந்த இடமே கொண்டாட்ட இடமாக மாறுகிறது. தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த செல்லம்மாளும் இந்த கொண்டாட்டத்துக்குள் ஐக்கியமாகிவிடுகிறார்.




பசியும்,கோவமுமாக இருந்த ஒரு இடம் பாரதியின் ஒரு பாடலுக்கு பின் கொண்டாட்டக்களமாக மாறுகிறது. இரவில் பாரதி, செல்லம்மாளிடம் சொல்கிறார், ''நீ கவலைப்பட வேண்டாம் செல்லம்மா. இந்த குருவிப்பாட்டையே நான் பத்திரிகைக்கு அனுப்புகிறேன். பணம் வரும்'' என்கிறார். இப்படியாக குருவிகளின் பசிக்கு அரிசியை தூவினார் பாரதி, பதிலுக்கு அந்த குருவிகள் ஒரு பாடலைக் கொடுத்து பாரதியின் வறுமையை போக்க உதவின என்பது வரலாறு. வறுமையிலும், பசியிலும் தமிழை கொண்டாடிய கவிஞன்தான் பாரதி.


இந்த சம்பவம் நடந்த போது சிறுமியாக இருந்த யதுகிரி பின்னாளில் 'பாரதி நினைவுகள்' என்ற புத்தகத்தை எழுதினார். அதில்தான் இந்த சிட்டுக்குருவி பாடல் உருவான கதை பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த அன்று சிறுமி யதுகிரியை அழைத்து தன்னுடைய சிட்டுக்குருவி பாடலை பாடிக்காட்டிய பாரதி கூறினாராம், ''யதுகிரி நீ பார்ப்பாய்.. நான் பார்க்கமாட்டேன். என்னுடைய சிறிய பாடல்களும் புகழப்படும். போற்றப்படும், தமிழகம் இன்னும் கண் திறக்கவில்லை. அப்படியே திறந்தாலும் தமிழகம் தற்போது குழந்தை பருவத்தில் இருக்கிறது'' என்று கூறுகிறார். இந்த சம்பவத்தை தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள யதுகிரி அம்மையார், பாரதியின் எதிர்கால ஞானத்தை குறிப்பிட்டு ஆச்சரியமடைந்துள்ளார்.