பாரதி- இந்த வார்த்தைக்கு எந்த ஒரு முன் அறிமுகமும், வாய் ஜால வார்த்தைகளும் அவசியம் இல்லை. 


இந்திய விடுதலைக்காக மக்களின் உணர்வைத் தன் வீரம் செறிந்த எழுத்துக்களால் தட்டி எழுப்பியவர் பாரதி. தலைசிறந்த கவிஞர். தானும் தன் குடும்பமும் உண்ண ஒரு வாய்க் கவளம் இல்லாத நிலையிலும்கூட, காக்கை, குருவிகளின் உணவுக்காகக் கவலைப்பட்டவர். இந்தத் தலைமுறையினரின் பெரும்பாலானோருக்கு புரட்சியாளராய், கவியாய், பத்திரிகையாளராய், பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தவராய் மட்டுமே அறியப்படுபவர். ஆனால் பாரதியின் உள்ளிருக்கும் உணர்ச்சிமிகு காதலனின் பிம்பத்தை அறிந்தோர் குறைவுதான்.


பல அவதாரங்கள் பூண்டவர்


மகாகவி பாரதியார் குழந்தைப் பருவத்தில் பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். சில காலம் காசியில் வசித்து வந்தவர், மீண்டும் தமிழகம் வந்து, மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். “சுதேச மித்திரன்” பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.  சுதந்திரப் போராட்ட நடவடிக்கையால் ஆங்கிலேயே அரசால் பல முறை கைது செய்யப்பட்டவர். 


தமிழ்ப் பற்று, தெய்வப் பற்று, தேசப் பற்று, மானுடப் பற்று ஆகிய நான்கும் கலந்தவர் மகாகவி பாரதியார். அண்ணாவால், “மக்கள் கவி” என்று அழைக்கப்பட்டவர். காதலாகிக் கசிந்து உருகியவர். சந்திரமதி, ரதி, கண்ணம்மா எனப் பல பெயர்களில் பெண்மையைப் போற்றியவர், எண்ணற்ற காதல் பாடல்களை எழுதினார். பெண்ணை இறையாகவும் தன்னை பக்தனாகவும் கருதி, காலத்துக்கும் அழியாத பாடல்களை வடித்தார். 




தன் வாழ்க்கையையே எழுதியவர் பாரதி. வாழ்க்கையில் இருந்தே படைப்புகளை உருவாக்கியவர். படைப்புக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் இல்லாத நிலையில் வாழ்ந்தவர். ஒவ்வோர் ஆணுக்குள்ளும் தனக்கான பெண் குறித்த ஒரு ரசனை இருக்கும். ஆசையும் தேடலும் இருக்கும். அதை தனக்கேயுரிய உவமைகளால் பாடி, உள்ளங்களை உவகை கொள்ள வைத்தவர் பாரதி.


"சுட்டும்விழிச் சுடர்தான், -- கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி, -- கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?"


*


"பச்சைக் குழந்தையடி- கண்ணிற் 
பாவையடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது - என்றன் 
இருவிழிக்குத்தே நிலவு..."


*


"பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு 
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு 
வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம் 
தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...


வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு 
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு 
காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி 
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...


காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே
நாத வடிவானவளே நல்ல உயிரே  கண்ணம்மா!..."


*




காதலில் சரணடைதல் ஓர் உன்மத்த நிலை. காதலே அத்தகையதுதான் என்றாலும் அதில் களித்திருக்கும் பொழுதுகளும், அறிந்தே ஒருவரை அன்பின்பால் நிபந்தனைகள் ஏதுமின்றி முழுதாய்ப் பற்றிக்கொள்ளுதலும் அழகின் ஊற்றுகள். அதையே பாடலில் கடத்தினார் பாரதி.


"நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்


பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே


மாறனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ
கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா
யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம்
எனக்குன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா..."


முப்பொழுதும் உன் கற்பனைகள்


"தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில்  செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்


வார்த்தை தவறிவிட்டாய்  அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி..."


*




"எந்த நேரமும் 
நின் மையல் ஏறுதடீ
குற வள்ளீ... சிறு கள்ளீ!..."


*


எத்தனை முறை கேட்டாலும் மெய் சிலிர்க்கச் செய்யும் வரிகள் பாரதியுடையவை. முண்டாசுக் கவியாய், முறுக்கு மீசைக்காரனாய், பெரு விழிகள் உயர்த்தியவனாய், புரட்சியாளனாய் மட்டுமே அவன் எழுதியும் பாடியும் சென்றுவிடவில்லை. கசிந்துருக வைக்கும் காலத்தால் அழியா காதல் பாடல்களுக்குச் சொந்தக்காரன், காதலர்களுக்கெல்லாம் காதலன்.


ஆதலால்.. அவன் வரிகளிலேயே...


"காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்


காணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்




ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே






ஆம். காதல் செய்வீர் உலகத்தீரே..!"