Magalir Urimai Scheme: மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தின் 2ஆம் கட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். 


1.65 கோடி பயனாளிகள்:


முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது.


பின்னர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. இதன் மூலம் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. அதன் இறுதியாக 1.5 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 15 -ஆம் தேதி இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் 1 கோடியை 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு மணியார்டர்கள், வங்கி கணக்குகள் என்று பல்வேறு முறைகளில் பணம் வழங்கப்பட்டது. 


 11.85 லட்சம் பயனாளிகள்:


இதற்கிடையில், விண்ணப்பித்த பலருக்கும் பணம் கிடைக்கவில்லை என்றும் முறையாக செயல்படுத்தவில்லை என்றும் மக்கள் தரப்பில் புகார் எழுந்த நிலையில், மீண்டும் விண்ணப்பிக்க அரசு அறிவித்தது.  வருமான வரி துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது.


அதன்படி 11.85 லட்சம் மகளிர் விண்ணபித்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்த 11.85 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டது. இதில் 7 லட்சம் பேர் தகுதியானர்கள் என்று கூறப்பட்டது. இதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் மகளிரின் எண்ணிக்கை 1 கோடியை 11 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதல்கட்டமாக 1 ரூபாய் குறுஞ்செய்தி மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது.


நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்:


வருகிற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால், அதற்கு முன்கூடியே மகளிர் உரிமை தொகை விடுவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படியே, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை  நவம்பர் 10ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மகளிர் உரிமைத் தொகை 2ஆம் கட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு ஏடிஎம் கார்டுகளையும் வழங்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  இந்நிலையில், இன்றைய தினம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றன. அதற்காக மெசேஜ் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.