டிசம்பர் 15 முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று (அக்.15) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி பேசினார். அவர் கூறியதாவது:
''தமிழகத்தில் 1.16 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 26 ஆயிரம் ரூபாய் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.
தகுதி வாய்ந்த மகளிருக்கும் உரிமைத் தொகை
டிசம்பர் 15 முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். இந்த முறை ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்களில் தகுதி வாய்ந்த மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்தக் கட்டுப்பாடு தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த மகளிர் உரிமைத் தொகையைப் பெற 28 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர். இந்த 28 லட்சம் மகளிரின் மனுக்களை பரிசீலனை செய்து, தகுதி வாய்ந்த அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகையாக, 1000 ரூபாய் அளிக்கப்படும்.
30 ஆயிரம் கோடி ரூபாய்
இதுவரை 30 ஆயிரம் கோடி ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாக, தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. புதிதாக வழங்க 9,059 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக, ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதாமாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து, வழங்கி வருகிறது. இதில் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படாத நிலையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாத பெண்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இதில் விண்ணப்பித்த மகளிருக்கு டிசம்பர் முதல் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.