புதுச்சேரி: புதுச்சேரியில், தகுதியுடைய அனைத்து வகைக் குடும்ப அட்டை தாரர்களுக்கும், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 585 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


585 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு


தீபாவளி என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.


தீபாவளி பரிசு - முதல்வர் அறிவிப்பு 


புதுச்சேரியில் 3.45 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு வழங்க உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையொட்டி சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்பட 5 பொருட்கள் அடங்கிய இலவச பரிசு தொகுப்பினை வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் கடந்தாண்டு தீபாவளிக்கு முன்பு திறக்கப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோவும், சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும் வழங்கப்படும் எனவும் வழக்கமாக, தீபாவளி பண்டிகையின்போது சர்க்கரையோடு நின்றுவிடும். இந்தாண்டு 585 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்,


இந்த நிலையில்., அமைச்சர் திருமுருகன்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.,


புதுச்சேரியில், தகுதியுடைய அனைத்து வகைக் குடும்ப அட்டை தாரர்களுக்கும், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 585 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் கடந்த 2024-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது, தகுதியுடைய அனைத்து உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் இலவசமாக 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை ஆகியவை தீபாவளித் தொகுப்பாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, புதுச்சேரி முதல்வரின் உத்தரவின்படி, தகுதியான அனைத்து வகைக் குடும்ப அட்டை தாரர்களுக்கும் உணவுப் பொருட்கள் தீபாவளித் தொகுப்பாக வழங்க அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தீபாவளி பரிசுத்தொகுப்பு பொருட்கள்


சர்க்கரை : 2 கிலோ


சூரியகாந்தி எண்ணெய்: 2 கிலோ


கடலைப்பருப்பு: 1 கிலோ


ரவை: 1/2 கிலோ (அரை கிலோ)


மைதா: 1/2 கிலோ (அரை கிலோ)


இந்தத் திட்டத்தின் கீழ், அரசு உணவுப் பங்கீட்டு அட்டை ஒன்றுக்குத் தலா ரூபாய் 585 வீதம் செலவிடப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மொத்த 3,45,974 குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர். புதுச்சேரியில் 2 ஆயிரத்து 62 ஆயிரத்து 313 பேரும், காரைக்காலில் 60 ஆயிரத்து 221 பேரும், மாஹேவில் 7 ஆயிரத்து 980 பேரும், ஏனாமில் 15 ஆயிரத்து 460 பேரும் என மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 974 பேர் பயனடைவர். தீபாவளி பண்டிகைக்கு முன்பே மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்குச் சென்றடையும் வகையில், ஏற்பாடுகள் துரிதமாகச் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநர் ஆகியோருக்கு அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.