வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக ஆலோசனைக் கூட்டம்

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து புகார் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ள நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார். தற்போது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று மதுரை கே.கே .நகரில் உள்ள கிருஷ்ணய்யர் சமுதாயக் கூட்டத்தில்  ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் முன்னாள் நீதி அரசர் து.அரிபரந்தாமன், வழக்கறிஞர் ஹென்றி திபேன், பி.யூ.சி.எல். பேராசிரியர் முரளி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 
தனிப்பட்ட நபரின் பிரச்னையில்லை
 
பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன்...,” வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இது தனிப்பட்ட வாஞ்சிநாதனுக்கான பிரச்னை அல்ல. இது ஒட்டுமொத்த சாதாரண ஒவ்வொரு மனிதருக்குமான பிரச்னை. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய புகார் மனு, யாரோ ஒருவர் மூலமாக சமூக வலைதளத்தில் வெளியானால் அதற்கு புகார் கொடுத்த நபர் எப்படி பொறுப்பாக முடியும்? ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.
 
ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கம் இது தான்
 
ஜி.ஆர்.சுவாமி நாதனை பற்றிய ஒரு புகார் மனுவிற்கான வழக்கில் அவரே அமர்வு நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது? பாலியல் தொடர்பான வழக்கில் சிக்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குகாய், அதற்குரிய வழக்கு ஒன்றில் அவரே அமர்வு நீதிபதியாக இருந்த போது நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. அது போன்ற தவறை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் செய்யக்கூடாது. அவ்வாறு அவர் செய்தால் தலைமை நீதிபதி தலையீடு செய்து இதனை தடுக்க வேண்டும். இந்த அநீதிக்கு துணை போகக்கூடாது. திங்களன்று வரக்கூடிய இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி சுவாமிநாதனே கைவிட வேண்டும் அல்லது தலைமை நீதிபதி தலையிட்டு இதனை ரத்து செய்ய வேண்டும் இதுதான் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கம். 
 
நீதி கிடைக்க முழு ஆதரவு
 
நீதிமன்ற நடவடிக்கைகளில் பல்வேறு விஷயம் சார்ந்து முன்னோடியான போராட்டங்களை மேற்கொண்டது, தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் தான். அதேபோன்று நீதித்துறையில் சமூக நீதியை வலியுறுத்தி போராடியதும் தமிழ்நாடு தான். குறிப்பிட்ட விஷயத்தில் வாஞ்சிநாதன் பின் வாங்கினால் கூட வழக்கறிஞர்கள் இதனை விடுவதாக இல்லை என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுத்த வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் கண்காணிப்பகம், பி.யு.சி.எல் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விவகாரத்தில் நீதி கிடைக்க முழு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்”. எனவும் தெரிவித்தார்.