உத்திரபிரதேச மாநிலம் கான்பூர், ஆக்ரா மற்றும் மஹாராஷ்டிராவில் நாக்பூர் உள்ளிட்ட நகரில் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ள போதிலும் அப்பகுதிகளில் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. - என குற்றச்சாட்டு.
மதுரை - கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்
தமிழகத்தில் பெருநகரமான சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இதற்காக மதுரையில் திருமங்கலத்தில் இருந்து, மதுரை மாநகர் வழியாக ஒத்தைக்கடைக்கு 31.93 கிலோ மீட்டர் தூரத்திற்கும். கோவையில் அவனிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரை; உக்கடத்திலிருந்து - சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவி வரை, 39 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ திட்டமானது தீர்மானிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என நம்பப்பட்டது
முக்கியம் வாய்ந்த மதுரை மற்றும் கோவை என இரண்டு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு கூடுதல் ஆவணங்களுடன் திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை, 10 மாதங்களுக்கு முன்னதாகவே தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. இந்த ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என நம்பப்பட்டது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஆய்வு பணி நடைபெற்று வந்தன. இந்த சூழலில் நம்பிக்கையுடன் காத்திருந்த தமிழக அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மக்கள் தொகை கணக்கீட்டின் படி 20 லட்சம் மக்கள் தொகை இருக்கும் நகர்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் ஏற்புடையது. கடைசியாக நடைபெற்ற மக்கள் தொகை கணக்கீட்டின் படி கோவையில் மக்கள் 15.84 லட்சமும், மதுரையில் 15 லட்சம் தான் என்பதால் இந்த இந்த இரண்டு நகருக்கு மெட்ரோ திட்டத்திற்கு பொருந்தாது என திருப்பு அனுப்பியுள்ளது. இது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அதிர்த்தியினை தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயிலுக்கு கைவிரிப்பு
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் & வழக்கறிஞர் பா.ஸ்டாலின் கூறுகையில்..,” மதுரை, கோவை போன்ற நகரத்திற்கு மெட்ரோ ரயில் அவசியமானது. மதுரை மெட்ரோ ரயிலுக்கு மட்டும் கிட்டதட்ட 11,360 கோடி ரூபாய் அளவிற்கு ரயில் திட்டங்களை செயல்படுத்த திட்ட அறிக்கை மாநில அரசு சார்பாக கடந்தாண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ திட்டம் செயல்பட்டால் மதுரை மற்றும் கோவையின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் வேலை வாய்ப்புகள் உயர்ந்து சென்னையின் நெருக்கம் குறையும். மதுரையின் திருமங்கலம் முதல் ஒத்தகடை மெட்ரோ திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்து வந்தோம். இந்த சூழலில் மெட்ரோ திட்டம் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.
மதுரையில் மண் பரிசோதனையால் ஏமாற்றம்
தென்மாவட்ட மக்களையும் - கொங்குபகுதி மக்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கின்படி உத்திரபிரதேச மாநிலம் கான்பூர், ஆக்ரா மற்றும் மஹாராஷ்டிராவில் நாக்பூர் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ள போதிலும் அப்பகுதிகளில் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் மக்கள் தொகை காரணம் காட்டி 2 முக்கிய நகருக்கு மெட்ரோ ரயில் கைவிரிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. மதுரையில் மண் பரிசோதனைகள் நடத்தப்பட்டதை பார்த்து மதுரைக்கு மெட்ரோ வந்து வளர்ச்சியடையும் என நம்பியது ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்து மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்றார்.