சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.

 

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணையனது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு  மீண்டும்  விசாரணைக்கு வந்தது.

 

அப்போது இந்த வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிந்ததால் இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற மார்ச் மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சம்பத்குமார் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 









கீரனூர் பிடாரி அம்மன் கோவில் சிலைகளை வழக்கு விசாரணை தொடர்பாக ஒப்படைக்க இடைக்கால தடை
  

 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த சுப்பையா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், " கடந்த 2005ஆம் ஆண்டு பிடாரி அம்மன் கோவிலின் 8 கோவில் சிலைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து, திருடுபோன சிலைகளையும் மீட்டு  நீதித்துறை நடுவர் முன்பாக சமர்ப்பித்தனர். அதைத்தொடர்ந்து,  நீதித்துறை நடுவர் முன்பாக, கோவிலின் தர்மகர்த்தா தரப்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டு திருடுபோன சிலைகள் அனைத்தையும் திரும்பவும் பெற்றுக்கொண்டு முறையான பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டது.

 

பிரசித்தி பெற்ற கோவில் என்பதால், அருகாமை கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது 8 சிலைகளையும் விசாரணைக்காக  ஒப்படைக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிலைகளை தற்போது கோவிலிலிருந்து எடுத்து வழங்கினால், பக்தர்களின் உணர்வுகள் பெருமளவில் பாதிக்கப்படும். அதோடு சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பாக அமையும்.

 



 

ஆகவே  பிடாரி அம்மன் கோவில் சிலைகளை  விசாரணை தொடர்பாக  ஒப்படைக்க தடை விதித்தும், அது தொடர்பாக வழங்கப்பட்ட நோட்டீஸை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் விசாரணைக்காக கோவில் சிலைகளை ஒப்படைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பாக அன்னவாசல் காவல்துறை ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 











வேட்பாளரின் மனுவை நிராகரிக்க கோரிய வழக்கில் மனுதாரருக்கு 1000 ரூபாய் அபதாரம்







 

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைசாமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "சிவகங்கை மாவட்டம் 27வது வார்டில் போட்டியிடும் மாரிமுத்து மீது 10 வழக்கும் மாரிமுத்து மனைவி பரமேஸ்வரி மீது 1 வழக்கும் உள்ளது. இவர்கள் இருவரும் வேட்புமனுவில் குற்ற வழக்குகளை முறையாக காண்பிக்கவில்லை.

 

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். இந்த நிலையில் பிப்ரவரி 5-ஆம் தேதி மனு மீதான பரிசீலனை நடைபெற்றது.அதில், மாரிமுத்து மற்றும் மனைவி பரமேஸ்வரி மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.எனவே, சிவகங்கை 27வது வார்டில் போட்டியிடும் மாரிமுத்து மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி குற்ற வழக்குகளை மறைத்து வேட்புமனுத் தாக்கல் செய்து இருப்பதால் அவர்களது மனுவை நிராகரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், குறிப்பிட்ட வேட்பாளர்களுக்காக மொத்தமாக பட்டியல் வெளியிட எவ்வாறு தடை விதிக்க முடியும்.மனுதாரர் கோரிய நிவாரணம் அவருக்கு எதிராக உள்ளது என கூறி மனுதாரருக்கு 1000 அபதாரம் விதித்தார். மேலும் 15 நாட்களுக்குள் அபதார தொகையை தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் கட்ட உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.