திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுந்தரராக பணியாற்றும் சீதாராமன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி வழக்கு சம்பந்தமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த பணியாளர்களை அதிகரிப்பது, விஐபி தரிசனங்களை முறைபடுத்துவது, அடிப்படை வசதிகள் செய்து தருவது போன்ற பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவில் சுதந்திர பரிபாலனா ஸ்தலத்தார் சபை தலைவர் குமார் ஐயர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், இந்த வழக்கு சேவை சம்பந்தமான தாக்கல் செய்யப்பட்டது ஆனால் இதனை பொதுநலன் வழக்காக விசாரணை செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவே இந்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் பொது மக்கள் நலன் சார்ந்தது, அனைவரும் சரிசமமாக சாமி தரிசனம் செய்வதற்காக இந்த வழக்கை பொதுநல வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை நாளை (ஏப்ரல் 1ஆம் தேதி) ஒத்திவைத்தனர்.
மருத்துவர் சிவராம பெருமாளின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பாஸ்துரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகன் சிவராம பெருமாள் மருத்துவத் துறையில் பட்டம் பெற்று சமூக சேவைகள் செய்து வந்தார். விஜய் ஆனந்த் என்பவர் கடந்த 2016ல் எனது மகன் மீது பொய்யான புகார் அளித்தார். விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு தந்த நிலையிலும் விஜய் ஆனந்த் மற்றும் அவரின் தூண்டுதலின் பெயரில் காவல்துறையினர் தொடர்ச்சியாக எனது மகனுக்கு தொல்லை அளித்து வந்தனர்.
கடந்த 2020 ஜூலை 12ஆம் தேதி எனது மகன் அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விஜய் ஆனந்த் மற்றும் காவல்துறையினர் வழிமறித்து தகாத வார்த்தைகளால் பொது இடத்தில் வைத்து திட்டி உள்ளனர். பொய் புகாரின் அடிப்படையில் எனது மகனை தொடர்ச்சியாக தொல்லை செய்ததால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி 2020 அக்டோபர் மாதம் எனது மகன் தற்கொலை செய்துகொண்டார்.
தனது தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்திருந்தார். இதனடிப்படையில் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயர்கள் இன்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து எனது மருமகளுக்கும் மிரட்டல் விடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே எனது மகனின் மரணம் குறித்த வழக்கு விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்
பூம்புகார் கப்பல் கழக வாடகை பாக்கியை - மேலாண் இயக்குநரிடம் வசூலிக்க உத்தரவு
தூத்துக்குடி சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக 12431 சதுர அடி காலி மனை தமிழக அரசின் பூம்புகார் கப்பல் கழகத்திற்கு கடந்த 1984ல் வாடகைக்கு வழங்கப்பட்டது. கடந்த 1.1.2018 வரை ரூ.1.76 கோடி வரை செலுத்தப்படாமல் பாக்கி உள்ளது.
எனவே, நிலுவை பாக்கியை உரிய வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பூம்புகார் கப்பல் கழக வாடகை பாக்கியை அதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரிடம் வசூலிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.