கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீடு செல்லாது என்னும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ள நிலையில், இட ஒதுக்கீட்டால் பலன் பெற்றவர்களின் நிலைமை என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக 2021 பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சிக் காலத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில், சட்டம் செல்லாது என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதே ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. சாதிவாரிக் கணக்கெடுப்பை முடிக்காமல் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாகவும் இட ஒதுக்கீட்டால், அதே பிரிவில் உள்ள பிற சமூகத்தினர் பாதிக்கப்படுவர் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
எனினும் 2022 பிப்ரவரி 8ஆம் தேதி, உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச் சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு செல்லும் என்று இன்று (மார்ச் 31) உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் ஏற்கெனவே இட ஒதுக்கீட்டின்கீழ் பயன் பெற்றவர்களின் நிலை என்ன? சட்டம் செல்லாது என்னும்போது அதன்கீழ் பயன்பெற்றவர்களின் இட ஒதுக்க்கீடும் செல்லாமல் போய்விடுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் தமிழ்மணி 'ஏபிபி நாடு'விடம் கூறியதாவது:
''வன்னியர் 10.5% உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இப்போது அறிவிக்கவில்லை. ஏற்கெனவே தமிழக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்ததால் அப்போதில் இருந்தே புதிதாக எந்த மாணவரும் இட ஒதுக்கீட்டின்கீழ் கல்வி நிலையங்களில் சேரவில்லை.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வந்த சட்டம்
2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக 2021ம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று வன்னியர் 10.5% உள் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அப்போதைய ஆளும் அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டது. இதில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கோப்பில் கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டதால், தொடர்ந்து எந்த முன்னேற்றமுமோ, ஆட்சேர்ப்போ ஏற்படவில்லை. தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதற்குப் பிறகு ஜூலை 26-ம் தேதி திமுக அரசு அரசாணையை வெளியிட்டது. வழக்கு நிலுவையில் இருந்ததால், திமுக அரசு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிடவில்லை.
இட ஒதுக்கீட்டின்கீழ் யாரும் வேலையில் சேரவில்லை
தொடர்ந்து நவம்பர் 1-ம் தேதி 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதனால் வன்னியர் இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைக்கு யாரும் சேர முடியவில்லை. அதே நேரத்தில் முந்தைய கல்வி ஆண்டில் கல்லூரிப் படிப்புகளில் மட்டும் மாணவர்கள் சேர்ந்தனர். இதனால் ஒருவர் கூட உச்ச நீதிமன்ற அறிவிப்பால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
மாணவர்களுக்கு பாதிப்பில்லை
ஏனெனில் அவர்களுக்குக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட நேரத்தில், இட ஒதுக்கீடு தவறு என்று நீதிமன்றம் சொல்லவில்லை. அதேபோல இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் ஏற்கெனவே பயன்பெற்ற மாணவர்களை வெளியே அனுப்புங்கள் என்றும் கூறவில்லை. உயர் நீதிமன்றமும் அவ்வாறு கூறவில்லை. அவ்வாறு சொல்லவும் முடியாது.
ஏனெனில் இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்ந்த மாணவர்களை வெளியே அனுப்பினால், அந்த இடங்கள் வீண்தான். அவர்களுக்கு மட்டும் தனியாக முதலாமாண்டு படிப்பை மீண்டும் தொடங்க முடியாது. அதனால் அவ்வாறு எப்போதும் செய்ய மாட்டார்கள்''.
இவ்வாறு வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.