தேனி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை முறைகேடாக பட்டா போட்டு குவாரி நடத்திய வழக்கில் ஜாமின் கோரி அதிமுகவை சேர்ந்த அன்னபிரகாஷ் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா பகுதியில் இருந்த 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையோடு பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, அரசு அதிகாரிகள் உட்பட பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும், அதிமுகவைச் சேர்ந்த அன்ன பிரகாஷ் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
பந்தல்குடியைச் சேர்ந்த செந்தில் மரண வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய மனு - விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் பதில் தர உத்தரவு
விருதுநகர் பந்தல்குடியைச் சேர்ந்த, சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் விருதுநகர் பந்தல்குடியில் வசித்து வருகிறேன். எனது தந்தை செந்திலை, பந்தல்குடியைச் சேர்ந்த பெத்துக்குமார், மலர், அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோர் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இது குறித்து புகார் அளித்த போதும், பலமணிநேர தாமதத்திற்குப் பிறகே FIR பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வழி வகுக்கும் வகையில், காவல் துறையினர் செயல்படுகிறார்கள் . வருவாய்த்துறை அமைச்சரின் உறவினர் ஆதரவாக இருப்பதால், காவல் துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். திட்டமிட்டு எனது தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனது தந்தையை தொலைபேசியில் அழைத்து தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள இடத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். பின்னர் அனைவரும் சேர்ந்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி, பின் காரை ஏற்றி கொலை செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் விபத்து என முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். எனது தந்தையின் மரணத்தில் உண்மை தெரிய வேண்டுமெனில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கொடைக்கானலில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி சாலையோர கடைகள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ,அகற்றும் பணிகள் துவக்கம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாகும்,இங்கு தினந்தோறும் ஏராளாமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் எப்போது பரபரப்பாக காணப்படும் ஏரிச்சாலை,அப்சர்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இந்நிலையில் சாலையோர கடைகள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி ஆக்கிரமிப்பாளர்களிடம் எச்சரிக்கை நோட்டீஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஏரிச்சாலை, அப்சர்வெட்டரி, நாயுடு புரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளை ஜேசிபி வாகனம் கொண்டும் தூய்மை பணியாளர்களை கொண்டு முதற்கட்டமாக சாலையோராக கடைகள் தற்போது அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணியில் வருவாய் துறையினர்,நெடுஞ்சாலை துறையினர்,நகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சாலையோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இதனால் ஏரிச்சாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்படுகிறது. இதே போன்று மேல்மலை, கீழ்மலை கிராமங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றி வருவதாக கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்துள்ளார்.