திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுந்தரராக பணியாற்றும் சீதாராமன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை  பிறப்பித்திருந்தது.


இந்த நிலையில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, கோவிலின் கூட்டத்தை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 60 காவலர்கள் இருந்த இடத்தில் தற்போது 30 காவலர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இதையடுத்து, தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் தரப்பில், "30 ஆயுதப்படை காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர் திருவிழா காலங்களில் கூடுதலாக காவல்துறையினர் நியமிக்கப்படுவார்கள். கோயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இதனையடுத்து நீதிபதி அதிரடி கேள்விகளை எழுப்பினர். அதில், "தற்போது செய்துள்ள ஏற்பாடுகள் கோயில் நடைமுறைகளை அமைதியான முறையில் கொண்டுசெல்ல போதுமானதாக உள்ளதா? என்றும், விஐபி தரிசனம் மூலம் தேவை இல்லாத பல பிரச்சினைகள் எழுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். 


 விஐபிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், அவர்களது பொறுப்புகானதே தவிர, தனிநபருக்கானது அல்ல. பொறுப்புக்கான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. விஐபி-களின் குடும்பத்தினர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களது உறவினர்களை அனுமதிக்கக் கூடாது.


மத நம்பிக்கை உள்ளவர்களே கோவிலுக்கு வருகின்றனர். கோவிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி. விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். கோவிலின் கட்டளைதாரர்கள் 10 நிமிடம் மட்டுமே சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.


திருச்சுந்தரர்கள் பக்தர்களை தகாத வார்த்தையில் பேசுவதாக தொடர்ந்து புகார் வருகிறது. இது போன்ற சூழலில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் வேலை செய்யும் காவல் துறையினர், பணியாளர்கள், பூசாரிகள், திருச்சுந்தரர்கள் பக்தர்களை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.


காவல்துறையினர், வருவாய்த்துறையினர், இந்து அறநிலையத் துறையினர் சிறப்பு தரிசனம் பெற அனுமதிக்க கூடாது. அவர்களும் பக்தர்களைப் போன்றே நடத்தப்பட வேண்டும். கோவிலின் உள்ளேயும், வெளியேயும் போதுமான அளவு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.


திருச்செந்தூர் கோவில் கடற்கரை முறையாக, தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஏதுவாக வழி பலகைகள் வைக்கப்பட வேண்டும். திருச்செந்தூர் கோவிலின் நாழிக்கிணறு பகுதி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அங்கு உரிய உடைமாற்றும் அறை வசதி போதுமான அளவில் செய்து தரப்பட வேண்டும்.


திருச்செந்தூர் கோவிலின் வெளியே உள்ள தெருக்கள் அனைத்தையும் சுத்தமாக பராமரிக்க திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகள் தினந்தோறும் அகற்றப்படவேண்டும்.  கோவிலின் உள்ளேயும், வெளியேயும் உள்ள பகுதிகள் சுத்தமாக இருப்பதை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும் என்றார். 


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும், அன்னதான கூடம் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டினை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திருச்செந்தூர் கோவிலில் 40 ஆயுதப்படை காவல்துறையினரை நியமிக்க வேண்டும். அவ்வபோது சூழ்நிலைகளைப் பொறுத்து காவல்துறையினரை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த அனைத்து உத்தரவுகளையும் 3 வாரத்தில் நடைமுறைப்படுத்த பட வேண்டும். உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண