கொரோனா இரண்டாவது அலையின் கொடுமை பலரையும் நிலை குலைய வைத்துள்ளது. கொரோனோ நோய் தொற்று பாதிப்பை விட மக்களின் நிலைதான் அதிகப்படியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் இழந்து பலரும் பட்டினி, பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.





இப்படி கொரோனா  தன்னுடைய சுயரூபத்தை காட்டிய போதும் பல இடங்களில் மனித நேயம் துளிர்த்துக் கொண்டே இருக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவது. கபசுர குடிநீர், முக கவசம் வழங்குவது, இலவச மருத்துவ சேவை ஆற்றுவது என தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் சேவையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.




 


இது குறித்து  ஆட்டோ ஓட்டுநர் மு.குருராஜிடம் பேசினோம்...," மதுரை அனுப்பானாடியில் தான் கூட்டுக் குடும்பமாக வசித்துவருகிறேன். எனக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வறுமையில் வாழ்ந்தாலும் நண்பர்கள் உதவியால் என்னால் சேவையும் செய்ய முடிகிறது. ஆட்டோ ஓட்டுநராக என்னால் என்ன, என்ன உதவி செய்ய முடிகிறதோ, அனைத்தையும் செய்துவருகிறேன். கடந்தாண்டு முதல் பேரலையின் போது நண்பர்களுடன் இணைந்து கபசுர குடிநீர், ரேசன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, சமூக இடைவெளிகளை கடைபிடிக்க ஏற்பாடு செய்வது, மதிய நேரங்களில் இலவச உணவு வழங்குவது என்று கடுமையாக பணி செய்தேன். அந்த உழைப்பு எனக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


 




தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றதற்கு பின் 2 வாரங்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டும் உதவி செய்ய வேண்டும் என நினைத்து பணிகளை தொடர்ந்தேன். ஏற்கனவே முன் அனுபவம் இருப்பதால் பாதுகாப்பான முறையில் இலவச சவாரிகள் செய்துவருகிறேன். கொரோனா நோயாளிகள், கொரோனாவில் இருந்து மீண்ட நபர்கள் என அனைவரையும் இலவசமாக ஏற்றிச் செல்கின்றேன். இதற்கு என்னுடைய நண்பர்களும் உதவி செய்கின்றனர். கூட்டுக் குடும்பம் என்பதால் தனிப்பட்டு பண பிரச்னை பெரிதாக இல்லை. அதனால் என்னால் சேவையாற்ற முடிகிறது.


 




 


சிலர் எனக்கு பணம் கொடுக்க முயற்சிப்பார்கள் ஆனால் அதனை வாங்குவதில்லை. அதையும் மீறி என்னுடைய சேவையில் பங்கெடுக்க நினைத்தால் ஆட்டோவிற்கு டீசல் போடச்சொல்லி கேட்பேன். அதன் மூலம் அவர்களால் ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக மாறியுள்ளது. இந்நிலையில் நேற்று  தமிழக முதல்வர் என்னுடைய சேவையை பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார். இது ஆகச்சிறந்த ஊக்குவிப்பாக இருந்தது. என்னுடைய சேவையை தமிழக முதல்வர் கவனித்துள்ளார் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. என்னுடைய சேவை தொடரும்" என்றார் நெகிழ்ச்சியாக.


எந்த தொழில் செய்கிறோம் என்பதில் இல்லை பெருமை. என்ன செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. அதற்கு உதாரணம் தான் மதுரை அனுப்பானடி ஆட்டோ டிரைவர் குருராஜ். சேவைக்கு அளவில்லை. அதை அளவிடவும் முடியாது. சேவை என்கிற மனப்பான்மை இருப்பதால் தான் ஆங்காங்கே மனிதம் துளிர்கிறது. அது தழைத்து ஓங்க அனைவரும் சேவை செய்வோம், முடிந்ததை.