தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் தயாரிக்கும் பணி பாதிப்படைந்தது.


நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. டெல்லி, தமிழ்நாடு, கர்நாடக போன்ற மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது. கண்காணிப்புக் குழு தலைவரும், தூத்துக்குடி ஆட்சியருமான செந்தில்ராஜ் அதற்கான ஏற்பாட்டை செய்தார்.




“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக 5 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு 5 கிலோ லிட்டர் உற்பத்தி செய்யப்படும். அதன்பிறகு 35 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். நேற்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்டெர்லைட்டிலிருந்து ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தேவைக்கேற்ப தமிழ்நாடு மருத்துவ கழகம் வழிகாட்டுதலில் அனுப்பப்படும்” என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஏற்கனவே கூறியிருந்தார்.  


இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் தயாரிக்கும் பணி பாதிப்படைந்துள்ளது. ஆலையில் இருந்து 4.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தியாகி நேற்று அனுப்பப்பட்ட நிலையில் இன்று திடீர் பாதிப்படைந்தது. இயந்திரங்களை பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறை பழுதுபார்க்க மூன்று நாள்கள் ஆகும் என ஆலை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆக்சிஜன் கடும் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் இது போன்ற தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் மூலம் தான் மத்திய, மாநில அரசுகள் சமாளித்து வருகின்றன. பூட்டியிருந்த ஸ்டெர்லைட்டும் அதற்காக தான் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஸ்டெர்லைட்டில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு, ஆக்சிஜன் உற்பத்திக்கு கடும் சமாளாக எழுந்துள்ளது. மூன்று நாட்கள் என்பது அதிக நாள் என்பதால், உடனே சரி செய்வதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.