மெட்ரோ ரயில் திட்டம்
நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில், சென்னை போன்ற பெரிய நகரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சேர பல மணி நேரம் ஆகும் நிலை உள்ளது. இந்த நிலையில் தான் சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் உடனடியாக சென்று சேர முடிகிறது. இதனையடுத்து சென்னையை அடுத்த பெரிய நகரமான மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கான ஆய்வு பணிகளை தமிழக அரசு நடத்தியது.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்
குறிப்பாக ரயில் நிலையம் அமையும் இடங்கள், மெட்ரோ ரயில் செல்லும் பாதை, மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. ஆனால் இந்த அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து திருப்பி அனுப்பியது. தமிழக அரசின் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருக்கும் காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டம் தொடர்பாக மத்திய அரசு மக்களவையில் மீண்டும் விளக்கம் அளித்துள்ளது
நிராகரித்த மத்திய அரசு
அந்த வகையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு எந்த நிலையில் உள்ளது. திருப்பி அனுப்பியது ஏன் என தமிழ்நாட்டை சேர்ந்த மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நகர்புறத் துறை இணை அமைச்சர் டோஹான் சாஹு,மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவது மிகுந்த செலவு மிக்கவை என்பதால் மத்திய அரசின் கொள்கையின் அடிப்படையில் ஆய்வும் சோதனையும் தேவை என தெரிவித்துள்ளார். மேலும் மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து 2024 பிப்ரவரி மாதம் பெறப்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு சில விளக்கங்களோடு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மீண்டும் விளக்கம்
மேலும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள, கோயம்பேடு-பட்டாபிராமம் இடையிலான மெட்ரோ திட்டங்கள், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டமும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ திட்டம் , மத்திய அரசின் ஆய்வில் உள்ளதாக எழுத்துப்பூர்வ தெரிவித்துள்ளார்.