கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் குற்றவியல் வழக்கு தொடரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் திருமணத்திற்கான கட்டணம், நன்கொடையை கோயில் நிர்வாகம் வசூலித்தால் ரசீது கண்டிப்பாக தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மனுதாக்கல்:
முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள சென்னை கபாலீஸ்வரர் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் பழனி முருகன் கோவில், சென்னை வடபழனி ஆண்டாள் கோவில், பார்த்தசாரதி கோவில் பெயர்களில் போலி இணையதளம் தொடங்கி காணிக்கை வசூல் செய்து மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழகத்தில் உள்ள கோவில்களின் இணையதளங்கள் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவாக பிறப்பிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்கண்டன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல முக்கிய கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகிறது. இக்கோயில்களுக்கு வெளிநாட்டில் இருந்து பலர் தற்போது அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இக்கோவில்களுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி அதற்கான ரசீதுகளை பெற்று செல்கின்றனர். வெளி மாவட்டங்கள், வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் பக்தர்கள் கோவில் இணையதளத்தில் உள்ள கணக்குகளில் பணத்தினை செலுத்துகின்றனர்.
தமிழகத்தில் முக்கியமாக உள்ள சென்னை கபாலீஸ்வரர் கோவில் பழனி முருகன் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சை பெரிய கோவில் போன்ற பிரபலமான கோவில்களிலும் இதே போல் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அறுபதாம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட திருமணங்கள் சிறப்பாக நடைபெறும் கோயில்களில் சில தனியார் இணையதள முகவரி வைத்து கோவிலுக்கு பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகளை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.
இது குறித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் மடங்களில் பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும், இணையதளம் வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கோவில் பெயரில் இணையதளங்களை கோவிலுக்கு சம்பந்தமில்லாத சிலர் வைத்துள்ளதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், கோவில் இணையதளங்கள் செயல்பாடு குறித்து உரிய வழிமுறைகளை நீதிமன்றம் பிறப்பிக்க உள்ளது எனக்கூறி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பிறகு, கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.