சேலம் ரயில் நிலையம் முதல் ஓமலூர் ரயில் நிலையம் வரை 12 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதையானது ஒரு வழி ரயில் பாதையாக இருந்தது. இதனை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முதல் ஓமலூர் வரை உள்ள ஏற்கனவே கடந்த 20 ஆண்டாக கிடப்பில் இருந்த மிட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ரயில்வே நிர்வாகம் சுமார் 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி குமார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்த தையடுத்து, அந்த ரயில் பாதையை ஆய்வு செய்யவும், அந்த பாதையில் அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டது. 



அதன்படி, அந்தப்பாதையில் ஆய்வு செய்வதற்காக தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே. ராய் நேற்று தனி சிறப்பு ரயிலில் சேலம் வந்தார். அதனையடுத்து, நேற்று சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஓமலூர் வரை டிராலி மூலம் சென்று அகல ரயில் பாதையை ஆய்வு செய்தார். அப்போது புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில், தண்டவாள அமைப்பு எவ்வாறு உள்ளது என பார்வையிட்டார். பாலங்கள், சிக்னல்கள், சண்டிங் பகுதிகள் ஆகியவற்றை ரயிலில் இருந்து இறங்கி சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.



அதன் பிறகு ஓமலூர் ரயில் நிலையம் சென்றடைந்தார். பின்னர், ஓமலூர்-சேலம் இடையே ரயில் சோதனைக்காக மதியம் 2.51 மணிக்கு ஓமலூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே. ராய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ரயிலை அதிகபட்சமாக 121 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. ஓமலூர்- சேலம் இடையே 12 கிலோ மீட்டர் தூரத்தை 9 நிமிடத்தில் கடந்து சேலம் ரயில் நிலையத்திற்கு 3 மணிக்கு வந்தடைந்தது. இந்த ஆய்வின் போது தலைமை கட்டுமான நிர்வாக அதிகாரிசி.கே.குப்தா, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீநிவாஸ், கோட்ட தலைமை பொறியாளர் ராம் கிஷோர், கட்டுமான துணை முதன்மை அதிகாரி கமல் ராஜ் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.