இயல், இசை, நாடக மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு,  தமிழ்நாடு அரசு  கலைமாமணி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி”, 19 முதல் 35 வயது வரையிலான நபர்களுக்கு “கலை வளர்மதி”, 36 முதல் 50 வயது வரையினாவர்களுக்கு “கலை சுடர்மணி”, 51 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு  “கலை நன்மணி” மற்றும் 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு “கலை முதுமணி” என, 5 பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.


கலைமாமணி விருது வழங்குவதற்கு என வயது வரம்பு, தகுதி மற்றும்  நெறிமுறை என எதுவும்  இதுவரை வகுக்கப்படவில்லை. இந்நிலையில் தான், 2019-2020ஆம் ஆண்டில் தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்பப்பெற வேண்டும் எனவும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது.


அந்த மனு விசாரணைக்கு வந்த போது, , கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள்? என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது எனவும்,  கலை பற்றி தெரியாதவர்களுக்கு எல்லாம் கலைமாமணி விருது வழங்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். சாதனைகள் படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய விருது தற்போது 2 படங்களில் நடித்தவர்களுக்கு எல்லாம் வழங்கப்படுகிறது எனவும் சாடினார். தற்[போதைய நிலையே நீடித்தால் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.


 


தொடர்ந்து, 2021ம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், அடுத்து வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா & கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த வழக்கு விசாரணை வரும் 28ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.