அழிந்து வரும் நாட்டு நாய் இனங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மதுரையைச் சேர்ந்த ஐடி பொறியாளர் ஒருவர். நாய்கள் வளர்ப்பில் பலர் ஆர்வம் கொண்டிருந்தாலும் நமது தமிழ்நாடு இன நாய்களுக்கு என்றே மிகப் பிரம்மாண்டமான பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார் ஐடி பொறியாளரான சதீஷ்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள போத்தம்பட்டி கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் நாய் பண்ணை அமைத்து அதில், நமது நாட்டு இன நாய்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிபாறை, கோம்பை, ராமநாதபுரம் (எ) மந்தை போன்ற நாய்களை மட்டுமே வளர்த்து பாதுகாத்து வருகிறார். அவருடைய மனைவி நாகஜோதி மற்றும் பிள்ளைகளும் அவருடன் சேர்ந்து நாய்களை கவனிக்கின்றனர்.எப்படி வந்தது இந்த ஆர்வம் என நாம் கேட்ட போது, "சிறு வயது முதலே நாய்கள் மீதான பிரியம் ரொம்பவே அதிகம். எங்கயாவது நாய்க்குட்டியைப் பார்த்தால் வீட்டுக்கு தூக்கிட்டு வந்துடுவேன். வீட்டுல திட்டி நாய்க்குட்டியை கொண்டு போய் விட்டுட்டு வந்துடுவாங்க... அதுக்கப்புறம் எங்கயாது நாய்க்குட்டியைல் பார்த்தா, அது பக்கத்துலயே உக்காந்துப்பேன். யாராவது அந்த நாய்க்குட்டியை தூக்கிட்டு போகுற வரைக்கும் அங்கேயே இருப்பேன்" என்கிறார்.
சதீஷின் தந்தை போலீசாக இருந்ததால், நாய் மேல் பிரியமாக இருக்கும் தனது மகனுக்காக ராஜபாளையம் நாய்க்குட்டி ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். ஆசையோடும், பிரியத்தோடும் 8 ஆண்டுகளாக வளர்த்த நாய் திடீரென காணாமல் போகவே, ரொம்பவே உடைந்து போயிருக்கிறார் சதீஷ். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாய் வளர்க்கும் ஆசை தலைதூக்க, நல்ல ராஜபாளையம் வகை நாயைத்தேட, உண்மையான வகை கிடைக்கவே இல்லையாம். பின்னர் ஒரு பண்ணையைப் பிடித்து நல்ல ரகமான உண்மை ராஜபாளையம் வகை நாயை கண்டுபிடித்து வளர்த்திருக்கிறார்.
சில மாதங்களில் நண்பர் ஒருவர் நாய் கண்காட்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க அங்கு சென்றவருக்கோ, அதிர்ச்சியும், ஆச்சரியமும்... காரணம் அங்கு வந்திருந்த நாய்களில் 98% வெளிநாட்டு வகை நாயினங்கள். அந்த நிகழ்வும், உண்மை ராஜபாளையம் வகை நாய்க்காக தேடி அலைந்த நிகழ்வும், இயல்பாகவே நாய் மீது அமைந்த பிரியமும் தான் இந்த முயற்சியை கையிலெடுக்க அடிகோலாய் அமைந்தது என்கிறார் சதீஷ். காலப்போக்கில் நமது நாட்டு நாய் இனங்கள் அழிந்து வருவதை கண்ட சதீஷ், நமது நாட்டு நாய்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கொஞ்சம் கொஞ்சமாக நாட்டு இன நாய்களை வளர்க்க ஆரம்பித்துள்ளர். தற்போது ஒரிஜினல் நாட்டு நாய்களை மக்களுக்கு கொடுத்து நாட்டு நாய் இனங்களை மீட்டெடுத்து வருகிறார்.
முதலில் வீட்டிற்கு அருகில் இருந்த இடத்தில் நாய்களை வளர்த்து வந்திருக்கிறார். நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அவற்றிற்கென சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பண்ணை, குளம், கூண்டு போன்றவற்றை அமைத்து பராமரித்து வருகிறார்.நாய் பண்ணை வைப்பதற்கு செலவு அதிகமாகிறது. அதனால், மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை வைக்க வங்கி நிதி உதவி செய்வதுபோல் நாய் பண்ணைக்கு நிதி உதவி கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறும் சதீஷ், ஒரு வேலையில் இருந்துகொண்டு தான் இது போன்ற நாய் பண்ணையை பராமரிக்க முடியும் என்கிறார்.
தற்போது சதீஷிடம் 35 ராஜபாளையம் வகை நாய்கள், 35 கன்னி, சிப்பிப்பாறை வகை நாய்கள், 25 கோம்பை வகை நாய்கள், 15 ராமநாதபுரம் (எ) மந்தை வகை நாய்கள் என 110 நாய்களை வளர்த்து வருகிறார். ஓராண்டு வரை சுட்டிக்குழந்தைகள் போலவே சேட்டைகள் செய்யும் நமது நாட்டு நாய்கள், அதன் பின்னர் வீட்டில் வயது முதிர்ந்தோர், குடும்பத்தலைவர், தினமும் உணவு கொடுக்கும் அம்மா, வம்பிழுக்கும் குழந்தைகள் என அடையாளம் கண்டு, அதற்கேற்றார் போல் நடந்து கொள்ளும். அது தான் நமது நாட்டு நாய்களின் சிறப்பு எனக்கூறும் சதீஷ், இதுவரை தன்னுயிரை கொடுத்து வளர்த்தோர் உயிரை காப்பாற்றியதாய் வெளியான செய்திகளில் முடிசூட்டியிருப்பவை எல்லாம் நமது நாட்டு, நாய்கள் தான் என மகிழ்ச்சி நறுமணத்தை பரப்புகிறார். உயிரானாலும், மரமானாலும் மண் சார்ந்தவைகளுக்கான மதிப்பு எப்போதுமே அதிகம் தான். அதனை உணர்ந்து கொண்டு, காத்துக் கொள்ளும் சமூகம்தான் எப்போதுமே வீறுநடை போடுகிறது.