முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. பொருளாளராக பதவி வகிப்பவருமானவர் டி.ஆர்.பாலு. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக பொறுப்பு வகிக்கும் இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை ஆகும். இவர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.


இதேபோல இவரது மகன் டி.ஆர்.பி ராஜா 2021 சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அதேபோல் தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராகவும் இருந்து வருகிறார். டி.ஆர்.பாலுவின் வீடு தளிக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது.





தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வீட்டில் இல்லாததால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதேபோல அவரது வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு வீடும் பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனை நீண்ட நாட்களாக நோட்டமிட்டுள்ள கொள்ளையர்கள் டி.ஆர்.பாலுவின் வீட்டின் அருகே உள்ள வீட்டின் கதவின் பூட்டை உடைத்து  கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர்,  டி.ஆர்.பாலுவின் வீட்டிற்குள் பூட்டை உடைத்து நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை நடைபெற்ற தகவல் அப்பகுதியில் தீயாய் பரவியது. இதையடுத்து, கொள்ளை சம்பவங்கள் குறித்து தகவலறிந்த உயரதிகாரிகள் உள்ளிட்ட காவல் துறையினர் ஏராளமானோர் டி.ஆர்.பாலுவின் வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனைக் கொண்டும் கொள்ளையர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.





இந்த நிலையில் கொள்ளை போன பொருட்கள் தொடர்பாக எந்தவித விவரங்களும் காவல்துறையினருக்கு இதுவரை கிடைக்கவில்லை. இதனால் என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது என்பது குறித்து அறிய முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். மேலும் டி.ஆர்.பாலுவின் அருகாமையிலுள்ள வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தி.மு.க. பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு வீட்டில் பூட்டை உடைத்து நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவம் மன்னார்குடி பகுதியில் மட்டுமின்றி, திருவாரூர் மாவட்டம் முழுவதும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண