Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்டத்தொடங்குவீர்கள் என பாராளுமன்றத்தில் எம்.பி. சு. வெங்கடேசன் எம்.பி  கேள்வி எழுப்பியுள்ளார். 


குளிர் கால கூட்டத்தொடர் பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், மதுரை எம்.பி. இன்று பேசுகையில், ”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறப்பது குறித்து பின்னர் பேசலாம், முதலில் கட்டத்தொடங்குங்கள். பிரதமர் அடிக்கல் நாட்டிய திட்டத்தினை நடைமுறைபடுத்த எதிர்கட்சிகளாகிய நாங்கள் கேட்கிறோம்” என குறிப்பிட்டு பேசினார். மேற்கொண்டு அவர் பேசுகையில், ”தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு நிதியை அள்ளிக்கொடுக்கும் அரசு, சிறுபான்மை, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு தரக்கூடாதா” என கேள்வியும் எழுப்பினார். மேலும், கல்வி உதவித்தொகையை நிறுத்தியதற்கு கண்டணத்தினையும் பதிவு செய்தார். 


இதற்கு முன்னர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய அமைச்சர் மாண்டவியா குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக தெரிவித்தது, ”மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதத்திற்கு நடைமுறைச் சிக்கல் தான் காரணமே தவிர, அரசியல் காராணம் எதுவும் இல்லை” என கூறியிருந்தார். 


அதேபோல், மதுரை எய்ம்ஸ் குறித்த வழக்கு ஒன்றில், மத்திய அரசு கூறியிருப்பதாவது, 


மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,



 

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

* எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான காலம் 5 வருடம் 8 மாதம் ஆகும். (மார்ச் 2021 முதல் அக்டோபர் 2026)

 

* அதிக செலவு மற்றும் அதிக நேரத்திற்கான அனுமதி மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி செலவின துறை பரிசீலனையில் உள்ளது.

 

* மதுரையிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை எம்பிபிஎஸ் படிப்பு ராமநாதபுரம் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

 

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக துணை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு கூறியுள்ளது. 

 

மேலும், இதற்கு முன்னர், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன், ”ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது பிலாஸ்பூர் எய்ம்ஸ், மதுரை எய்ம்ஸ். ஆனால், ஒன்று திறக்கப்பட்டு விட்டது. ஒன்றுக்கு இன்னமும் சுவர் கூட கட்டவில்லை. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது. ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை. ஒரு  தலைப்பட்சமாக நிதியினை வைத்து பல அரசியல் தந்திர வேலைகளை செய்ய முடியும் என்று ஒன்றிய அரசு  நினைக்கிறது” என குறிப்பிட்டிருந்தார் அதற்கு பதில் அளிக்கும் வகையில்தான் மத்திய குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மதுரை எய்ம்ஸ் குறித்து பேசியிருந்தார்.