தமிழ்நாட்டு அரசியலில் தொடர் பேசு பொருளாகவே மாறியுள்ளது மதுரை எய்ம்ஸ். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை மறைந்த பாஜக தலைவரும் முன்னாள் நிதித்துறை அமைச்சருமான அருண் ஜெட்லிதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது முதன்முதலில் வெளியிட்டார். 


கடந்த 2015ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியான நிலையில், 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி மருத்துவமனைக்கான அடிக்கலை நாட்டினார். இருப்பினும், மருத்துவமனை அமைப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், மக்கள் மத்தியில் மேலும் பிருபலம் அடைய இந்த விவகாரத்தை கையில் எடுத்தார்.


மருத்துவமனை கட்டுவதாக கூறி, ஒரே ஒரு செங்கலை மட்டுமே வைத்திருப்பதாகக் கூறி ஊர் ஊராக பிரசாரம் செய்தார் உதயநிதி. மக்கள் மத்தியில், அந்த பிரசாரம் பெரிய அளவில் ஏடுபட்டது என்றே சொல்ல வேண்டும்.


இச்சூழலில்தான், மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது மதுரை எய்ம்ஸ். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்த நிலையில், மதுரையின் பாஜகவின் பல்துறை வல்லுநர்களின் கூட்டம் நடைபெற்றது.


அதில், பேசிய அவர், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார். 


ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது” எனக் கூறியிருந்தார்.


இதையடுத்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூருடன் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்த இடத்தை நேற்று நேரில் பார்வையிட்டனர். அங்கு இன்னும் எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படாததை சுட்டிக் காட்டும் வகையில் ஒரு புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வெங்கடேசன்.


 






அந்த பதிவில், “பாஜக ஆட்சி, புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி நான் மற்றும் மாணிக்கம் தாகூர் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்” என பதிவிட்டுள்ளார்.


 






இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக பேசியது குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள்.


பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் கருத்து சரியாக புரிந்துக்கொள்ளப்படவில்லை. எய்ம்ஸ் ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்று தான் நட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர்" என்றார்.