மதுரை 'எய்ம்ஸ்' தலைவர் டாக்டர் நாகராஜன் காலமானார். அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், கூட்டுறவுத்துறை செயலாளருமான ராதாகிருஷ்ணனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் நாகராஜன் காலமானதை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பிரபல நரம்பியல் மருத்துவர்:
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் கட்டோச் பதவி வகித்து வந்தார். பின்னர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கையில், வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக உள்ள நாகராஜன் வெங்கடராமனை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்தனர்.
மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராகவும், சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை ஆற்றல்சார் பேராசிரியராகவும், கர்நாடகாவின் பெங்களூரு தேசிய மனநல அகாடமி உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.