மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கான இடமாக தோப்பூர் தேர்வு செய்யப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் கட்டோச் பதவி வகித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக உள்ள நாகராஜன் வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி காலமானார். அவரது மறைவை நாகராஜனின் மருமகனும், ஐ.ஏ.எஸ் அதிகாரியும், கூட்டுறவுத்துறை செயலாளருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில் காலியாக உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் உத்தரப்பிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. அதேசமயம் சில தினங்களுக்கு முன்பு, எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024 ஆம் ஆண்டு தொடங்கி 2018 ஆம் ஆண்டு தான் முடிவடையும் என ஜப்பான் நிறுவனம் தெரிவித்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.