வங்கக்கடலில் தெற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு முன்பு, வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு தமிழ்நாட்டில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமாக 20 செ.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்தது. இதனால், சென்னை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.


இந்த நிலையில், சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்கள் அவதியுறும் அவலநிலையை கண்டு சென்னை உயர்நீதிமன்றம் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தில், “ மழை அதிகாரிகளுக்கு மேலும் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. அதை முறையாக கற்று அடுத்தடுத்த மழைக்காலங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்கள்பாதி நாள் தண்ணீருக்காக தவிக்கிறார்கள். மீதிநாள் தண்ணீரால் தவிக்கிறார்கள்.” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.




சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு மட்டும் கொட்டித்தீர்த்த கனமழையால் நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், தி.நகர், வடபழனி, புரசைவாக்கம், கோடம்பாக்கம், அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு, பாரிமுனை, ஓட்டேரி, கொளத்தூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளநீர் முழங்கால் அளவிற்கு பெருக்கெடுத்து ஓடியது. சென்னையின் பல இடங்களில் சுரங்கப்பாதைகள் மழைநீரில் மூழ்கிவிட்டது.


கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், பல வீடுகளுக்குள்ளேயும் மழைநீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர். இதுமட்டுமின்றி, சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறக்கப்பட்டதால் அதைச்சுற்றியுள்ள கரையோர மக்களும் வெள்ள அபாய எச்சரிக்கையால் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.




ஒருநாள் அதிகனமழை பாதிப்பால்  சென்னை மாநகரமே ஸ்தம்பித்து உள்ளது. இந்தநிலையில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் சென்னையில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அதிகனமழை எச்சரிக்கை வரும் 12-ந் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் போதியளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டதாக கூறினாலும், பொதுமக்கள் மிகுந்த அச்சத்திலே உள்ளனர்.


சென்னையைப் பொறுத்தமட்டில் இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வெள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண