இந்த நூற்றாண்டிலும் பில்லிசூனியம், மாந்திரீகத்தை நம்பி நரபலி தரப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
ம.பி. பெண் மனு
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்து மனுவில், "தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்த்ரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர். தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளதாகவும், அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க எவருக்கும் தைரியமில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்ததாகவும், தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், தனது தாய் சார்ந்துள்ள அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவர் என மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், வலுக்கட்டாயமாக தன்னை போபாலுக்கு கொண்டு சென்று விட்டால் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது என மனுவில் கூறியுள்ளார். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதி சந்திரசேகரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
”ம.பி. பெண்ணுக்கு பாதுகாப்பு தரப்படும்"
மனுதாரரான ம.பி.மாநிலம் போபாலைச் சேர்ந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், ”இந்த நூற்றாண்டில் கூட பில்லிசூனியம், மாந்திரீகத்தை நம்பி நரபலி தரப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார். பெண்ணுக்கும், அவருக்கு உதவிய இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவும், வழக்கு குறித்து ஷாலினி சர்மாவின் பெற்றோர் பதிலளிக்கவும் உத்தவிட்டுள்ளார். மேலும், வளர்ப்பு தாய் மீது பெண் அளித்த புகாரில் எடுத்த நடவடிக்கை பற்றி போபால் ஆணையர் பதிலளிக்க வேண்டும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க
‘தமிழில் இல்லா பெயர் பலகை மீது கருப்பு மை பூசுங்கள்’ - மருத்துவர் ராமதாஸ்