நாடு முழுவதும் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு சேர நீட் தேர்வு கட்டாயமாக உள்ளது. இந்த நீட் தேர்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் பெயரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 7.5% ஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது. இது தொடர்பான சட்டத்தையும் இயற்றியது. 


தமிழ்நாடு அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 


இந்த வழக்கு விசாரணையில் ஏற்கெனவே தமிழ்நாட்டிலுள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. மீதமுள்ள 31 சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5%  இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்,“பொதுப்பிரிவினருக்கான 31% இட ஒதுக்கீட்டில் இந்த 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மொத்த இடங்களில் இருந்து தான் இந்த 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை போன்ற அனைத்து அம்சங்களும் ஆராய்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் பெயரில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று நீட் தேர்விற்கு பயிற்சி பெற முடியும். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு மிகவும் குறைவு” என்று தெரிவிக்கப்பட்டது. 


இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்தச் சூழலில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண