சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களிலும் தமிழ்நாட்டுக்கு வரும் உள்நாட்டு விமானங்களிலும் அறிவிப்புகளை தமிழ் மொழியில் கட்டாயம் வெளியிட வேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு: உலகத் தமிழாராய்ச்சி அறக்கட்டளைத் தலைவர் சி. கனகராஜ் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் நீதிமன்றம் இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் அறிவிப்புகளை தமிழில் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.


சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளில் கூட தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன என்றும் தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களிலும் இதுபோன்ற அறிவிப்புகளை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


விமானங்களில் தமிழ் மொழியில் அறிவிப்புகள் வெளியிடுவது கட்டாயமாகிறதா? இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு ஆகியோர் விசாரித்தனர். ஆனால், பொது நல மனுவில் கோரி இருப்பது போன்று நேர்மறை உத்தரவை பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.


12 வார காலத்திற்குள் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க மட்டுமே மத்திய அரசுக்கு உத்தரவிட முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், உள்நாட்டு விமானங்களில் அறிவிப்புகள் அனைத்தையும் தமிழ் மொழியில் கட்டாயம் வெளியிட வேண்டும் எனக் கூறி, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள பொது நல வழக்கை முடித்து வைத்தது.