பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல்துறை விளக்கத்தை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் இளம் வயது திருமணம் தொடர்பான வழக்கில் 17 வயதுக்குட்பட்ட இருவரையும் காவல்துறையினர் நடத்திய விதத்தில் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் இருவரையும் குழந்தைகளாக கருத வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த கருத்தை தெரிவித்துள்ளது.


குழந்தை திருமண விவகாரம் சமீப காலமாக பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. குறிப்பாக, சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தங்களின் குழந்தைகளுக்குச் சட்டவிரோதமாக குழந்தைத் திருமணம் செய்துவைப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்து வண்ணம் இருந்தது.


சிதம்பரம் குழந்தை திருமண விவகாரம்:


இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு கடலூர் மாவட்ட சமூகநலத் துறையினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நான்கு குழந்தைகளுக்குக் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். 


இதையடுத்து, நடராஜர் கோயில் தீட்சிதர்கள், செயலாளர் ஹேமசபேசன் தீட்சிதர் உட்பட சிலரைக் கைதுசெய்தனர். இதைக் கண்டித்து சக தீட்சிதர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தீட்சிதர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.


சிறுமிகள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு இருவிரல் பரிசோதனை எனும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது எனக் கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி புயலை கிளப்பினார். இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்தார்.


இரு விரல் பரிசோதனை குறித்து உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?


இந்த சூழலில், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்தாண்டு அக்டோபர் மாதம், இரு விரல் பரிசோதனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்தது. இரு விரல் பரிசோதனை ஆணாதிக்கமானது என்றும் பாகுபாடு மிக்கது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்த பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பதை மத்திய, மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.


பெண்ணின் பாலியல் உறவு தொடர்பான விவரங்களை கண்டறிய இந்த பரிசோதனை சரியானது என்பதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களை இது மேலும் உணர்வுப்பூர்வமாக பாதிக்கிறது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.