சாலையோரத்தில் இருக்கும் கல்லுக்கு துணியை போர்த்தினால் அது கடவுள் சிலையாகிவிடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. தனியாருக்கு சொந்தமான இடத்திற்கு உள்ளே செல்ல முடியாத வகையில் கடவுள் சிலை ஒன்றை உள்ளூர்வாசிகள் வைத்துள்ளனர். 


"சாலையோரத்தில் இருக்கும் கல் எல்லாம் கடவுள் இல்லை"


இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த கல்லை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். 


அதில், "சாலையோரத்தில் கல் ஒன்றுக்கு பச்சை நிற துணியை போர்த்திவிட்டு, அது கடவுள் சிலை என்ற நிலையை அடைந்துவிட்டதாக ஒருவர் கூற முடியாது. தனியார் நிலத்தில் சிலையை வைத்துவிட்டு அதற்கு சொந்தமானவரின் உரிமைகளை அனுபவிக்க விடாமல் தடுக்க முடியாது. சமுதாயத்தில் இம்மாதிரியான மூடநம்பிக்கைகள் தொடர்ந்து நிலவுவது துரதிர்ஷ்டவசமானது. மக்கள் வளர மறுக்கின்றனர்" என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.


தனக்கு சொந்தமான இடத்தின் நுழைவாயில் அருகே உள்ள கல்லை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கோரி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், "பச்சைத் துணியால் போர்த்தப்பட்டிருந்த கல்,  தனியார் இடத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்ல முடியாமல் கல் இடையூறாக இருந்தது.


சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து:


கல்லை அகற்ற அந்த இடத்திற்கு சொந்தமானவர் முயற்சித்துள்ளார். இருப்பினும், சில உள்ளூர்வாசிகள் அதை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஏனெனில், இது ஒரு கல் மட்டுமல்ல, அது ஒரு கடவுள் சிலை என்றும், அதில் தலையிடக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


குறிப்பிட்ட இடத்தில் இருந்து கல்லை அகற்றுவது சிவில் பிரச்னை என்றும் இந்த விவகாரத்திற்கான தீர்வை சிவில் நீதிமன்றமே வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் முன்வைத்தது.


இந்த வாதத்தை மறுத்த நீதிமன்றம், "நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை இந்த நீதிமன்றம் கவனமாக ஆய்வு செய்தது. மனுதாரருக்குச் சொந்தமான இடத்தின் எதிரே கல் நடப்பட்டிருப்பது தெரிகிறது. அந்த கல்லை பச்சை துணியால் மூடி, அதை சிலை என்று யாரோ ஒருவர் அழைக்க முயற்சி செய்கிறார்.


அந்த இடத்தில், தனது சொத்தை அனுபவிக்க விடாமல் மனுதாரரை தடுத்துள்ளனர். மனுதாரரால் கல்லை அகற்ற முடியவில்லை. இதற்காக, மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுக முடியாது" என தெரிவித்தது.