”நீலகிரியில் தேடப்பட்டு வரும் புலியை உடனே கொல்ல வேண்டாம்; T23 ஆட்கொல்லியாக இல்லாமலும் இருக்கலாம், நம்மிடம் குறைந்த அளவே புலிகள் உள்ளன.” என T23 புலியை கொல்லும் உத்தரவுக்கு தடை கோரிய மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபரை புலி தாக்கியது. இதில் கடுமையான காயத்துடன் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து மசினகுடி பகுதியில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலையில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனிடையே ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார்.
இந்நிலையில், T23 புலியை கொல்லும் உத்தரவுக்கு தடை கோரிய மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சனிப் பானர்ஜி, “உடனே புலியை கொல்ல வேண்டாம்; T23 ஆட்கொல்லியாக இல்லாமலும் இருக்கலாம், நம்மிடம் குறைந்த அளவே புலிகள் உள்ளன” என தெரிவித்துள்ளார். மேலும், புலியை உயிரோடு பிடிக்கவே விரும்புகிறோம் என தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது.
புலி நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புலியின் நடமாட்டத்தை கண்டறிய அதவை என்ற சிப்பிப்பாறை நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ட்ரோன் மூலமும் புலியின் இருப்பிடத்தை அறிய வனத்துறையினர் முயற்சி செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் பிடியில் அகப்படமால் புலி சுற்றி வருகிறது. 11-வது நாளாக வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயக்க ஊசி மற்றும் துப்பாக்கியுடன் வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். புலி நடமாட்டம் காரணமாக சிங்காரா, மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.