காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விபத்து ஒன்றில் பெண் பல் மருத்துவர் உடல் குறைபாடு அடைந்தார். இதுதொடர்பாக, அந்த பெண் பல் மருத்துவர் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழகத்தில் இருசக்கர வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி கட்டாயம் பொருத்தவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவது தொடர்பாக வாகன தயாரிப்பு நிறுவனங்களும் அறிவுறுத்தல் வழங்கவேண்டும். இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும்போது, வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தவேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு அதிவேகமாக செல்வதுதான் காரணமாக இருப்பதால், வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்துவது கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும், மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு மணிக்கு 120 கி,மீ. வேகம் வரை செல்லாம் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்து வேகத்தை குறைக்க வேண்டும் என்றும், இந்த வேகக்கட்டுப்பாடு பொருத்தும் உத்தரவை இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கும் பொருந்தும் வகையில் விதிகளை திருத்தம் செய்யவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், வாகன விதிகள் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.