தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், கட்ட பஞ்சாயத்து நிலையங்களாக மாறிவிட்டன என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விமர்சித்துள்ளது. மகளிர் காவல் நிலையங்கள், முறையான விதிகளை பின்பற்றுவதில்லை என தொடர் புகார் எழுந்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளது.


"தரம் தாழ்ந்து நடந்து கொள்ளும் மகளிர் காவல்நிலையங்கள்"


ஆர். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையின்போது, மகளிர் காவல் நிலையங்களை கடுமையாக விமர்சித்தது. "சமுதாயத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனம், வெட்கமற்ற கட்ட பஞ்சாயத்து நீதிமன்றமாகத் தன்னைத் தாழ்த்திக் கொண்டிருப்பதை கவனிப்பது ஏமாற்றமளிக்கிறது.


முதலில் கைது செய்துவிட்டு பின்னர், அதற்கான வழிமுறைகளை பின்பற்றுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த இழிவான அணுகுமுறை அடிக்கடி காணப்படுகிறது. திருமண தகராறுகளில் தரப்பினரின் பணபலம் மற்றும் ஆள் பலத்தைப் பொறுத்து துன்புறுத்துவது அதிகரித்து வருகிறது. 


பாலின உணர்வை உறுதி செய்வதில் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், சமநிலையாக பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். மாறாக, சமூகத்தை விழிப்படையச் செய்ய வேண்டிய அதிகாரிகளே விழிப்புணர்வில்லாமல் செயல்படுகின்றனர்" என நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.


டிஜிபிக்கு அதிரடி உத்தரவு:


காவல்துறை இயக்குநருக்கு (டிஜிபி) பல்வேறு விதமான உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம், மாநிலம் முழுவதும் இயங்கும் 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் இதை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


"மாநில காவல்துறையின் மகளிர் பிரிவின் தற்போதைய பொன்விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சகத்தால் இத்தகைய உத்தரவுகள் அமல்படுத்தப்படும்" என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.


நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்னென்ன..?


சமூகத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் இளம்பெண்கள் மற்றும் இளம்பெண்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அத்தகைய நிலையங்களில் பெண்களுக்கான சிறப்பு பிரிவு உருவாக்கப்பட வேண்டும். இந்த நிலையங்கள் அனைத்திலும் குடும்ப ஆலோசனைப் பிரிவு புத்துயிர் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.


சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வார இறுதியிலும் பெண்கள் மேம்பாடு முகாம்களை நடத்த வேண்டும். திருமண தகராறுகளில் குடும்ப ஆலோசனை வழங்கப்பட்டு, அதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.


வழக்கின் பின்னணி:


மதுரையை சேர்ந்த ஜனார்தன் என்பவர், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் (திலகர் திடல்) விமலாவுக்கு எதிராக தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.  


"திருமண தகராறில் மனுதாரரை, வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் கைது செய்ததன் மூலம் காவல்துறை பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது. அதிகார வரம்புக்குட்பட்ட மாஜிஸ்திரேட்டும், மனுதாரரை சாதாரணமாக காவலில் வைக்க அனுமதித்துள்ளார்" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இருப்பினும், விமலா தாக்கல் செய்த பதில் மனுவில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதைக் கருத்தில் கொண்டு, காவல்துறை அதிகாரியாக தனது கடமைகளை ஆற்றும் போது, ​​இதுபோன்ற அருவருப்பான செயலில் மீண்டும் ஈடுபடக்கூடாது என்று நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து வழக்கை முடித்து வைத்தது.