அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கிடையே நிலவி வந்த பிரச்னை ஒரு வழியாக நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.


சட்டப்பேரவை செயலாளர், சபாநாயகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்:


கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது. 


கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.


இதையடுத்து,  எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரையும், அதிமுக துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் எடப்பாடி கே.பழனிசாமி நியமித்தார். ஆனால், பல முறை நினைவூட்டல்களை அனுப்பிய பிறகும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டதற்கு சபாநாயகர் ஒப்பதல் அளிக்கவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது.


சட்டப்பேரவைில் அதிமுக உறுப்பினர்களுக்கான இருக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சபாநாயகர் இன்னும் ஒப்புதல் தரவில்லை என இபிஎஸ் தரப்பு மனுவில் குறிப்பிட்டிருந்தது.


20 முறை கடிதம் எழுதினாரா இபிஎஸ்?


தற்போதைய இருக்கை ஏற்பாட்டின்படி, ஓபிஎஸ் மற்றும் அவரது இரண்டு ஆதரவாளர்கள் அதிமுக வரிசையில் அமர்ந்திருப்பது, சட்டமன்றத்தில் கட்சியின் செயல்பாட்டை பாதிக்கிறது என்றும் விவாதங்களின் போது அவர்கள் தலையிடுகிறார்கள் என்றும் இபிஎஸ் தரப்பு மனுவில் தெரிவித்திருந்தது.


இந்த நிலையில், இன்றைய விசாரணையின்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி துணைத்தலைவர், துணைச் செயலாளரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு 20 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என இ.பி.எஸ் தரப்பு வாதிட்டது. இருக்கை மாற்றம் தொடர்பாக இதுவரை சபாநாயகர் முடிவெடுக்கவில்லை என்றும் இ.பி.எஸ். தரப்பு தெரிவித்தது.


இந்த வாதத்தை கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் சபாநாயகர் பதிலளிக்க உத்தரவிட்டார். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்த வழக்கின் மீதான விசாரணை டிசம்பர் 12க்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.